அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் `கட்'! - தமிழக அரசு திடீர் நடவடிக்கை #JactogeoProtest | Suspension of the salaries of Government staffs

வெளியிடப்பட்ட நேரம்: 12:01 (30/01/2019)

கடைசி தொடர்பு:12:02 (30/01/2019)

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் `கட்'! - தமிழக அரசு திடீர் நடவடிக்கை #JactogeoProtest

புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து,  உயர் நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, கடந்த 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

'ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் இந்தக் கோரிக்கைகளில் ஒன்றைக்கூட ஏற்க முடியாது' என அரசு திட்டவட்டமாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல் கைது, பணியிடை நீக்கம், துறை ரீதியிலான நடவடிக்கை போன்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது. ஒரு வார காலமாக நடைபெற்றுவந்த இந்தப் போராட்டம் நேற்று முதல் சற்று சீராகி, பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு தமிழக அரசு மேலும் ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவருக்கும் இந்த மாத சம்பளத்தை நிறுத்திவைக்க வேண்டும் என கருவூலத்துக்கு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

ஒரு வாரத்துக்கு முன்பு ஆசிரியர்கள் போராட்டம் தொடங்கியபோதே தமிழக தலைமைச் செயலர், அனைத்துத் துறைகளுக்கும் அறிக்கை அனுப்பி,  ‘நோ ஒர்க் நோ பே’ (No Work No pay) என்ற அடிப்படையில், ஆசிரியர்கள் வேலைக்கு வராத நாள்களில் அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது ஆசிரியர்கள் மட்டுமல்லாது அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் பிடித்தம்செய்ய வேண்டும் என்றும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளும் சேர்த்து பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக பணிக்கு வராத அனைத்து ஊழியர்களின் பட்டியலைச் சேகரித்து அனுப்பும்படி அனைத்துத் துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், சில துறைகளில் முறையான பட்டியல் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இது, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கவனத்துக்குச் செல்ல, அவர் அனைத்து பட்டியல்களையும் திரும்பப் பெற்று, முறையான பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் மீண்டும் உத்தரவிட்டுள்ளார். இதனால், இந்த மாதம் 30-ம் தேதி வரவேண்டிய சம்பளத் தொகை, பிடித்தம் செய்யப்பட்டு, பிப்ரவரி மாதம்தான் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என வங்கிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. 

மேலும், போராட்டத்தில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என்றும், மருத்துவ விடுப்பில் சென்றவர்களின் பட்டியல் தனியாகத் தயார்செய்து, அது மருத்துவத் துறைக்கு அனுப்பி சரிபார்த்த பின்னரே அவர்களின் சம்பளமும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசின்  இந்த அறிவிப்பினால், ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.