`நான் இன்னும் மீளவில்லை; வாழ்த்த வராதீங்க!' - கருணாநிதி மறைவை நினைத்து கண்கலங்கும் அழகிரி | Alagiri statement regarding his Birthday

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (30/01/2019)

கடைசி தொடர்பு:12:50 (30/01/2019)

`நான் இன்னும் மீளவில்லை; வாழ்த்த வராதீங்க!' - கருணாநிதி மறைவை நினைத்து கண்கலங்கும் அழகிரி

"என் பிறந்த நாளுக்கு யாரும் என்னை வாழ்த்த வரவேண்டாம், விளம்பரங்கள் வைக்க வேண்டாம்" என்று மு.க.அழகிரி கறாராகக் கூறிவிட்டதால், இந்த ஜனவரி 30-ம் தேதி (இன்று) மதுரை மாநகரமே பரபரப்பு இல்லாமல் அமைதியாகக் காட்சியளிக்கிறது.

அழகிரியின் வீடு

தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்த 1996-க்குப் பிறகு, தென் மண்டலத் தளபதியாக விளங்கிய மு.க.அழகிரியின் பிறந்தநாள் விழாவை மதுரை குலுங்கக் குலுங்க திருவிழாபோல கொண்டாடிவந்தார்கள் அவரின் ஆதரவாளர்கள். அன்றைய தினம் மதுரையை மூடியதுபோல ப்ளெக்ஸ்கள் காட்சிதரும். மாநகரெங்கும் ஸ்பீக்கர்களில் அழகிரி புகழ் பாடும் பாடல்கள் காதைப் பிளக்கும். எங்கு பார்த்தாலும் அன்னதானம், இனிப்பு வழங்குதல், நோட்டுப் புத்தகம் வழங்குதல் என்று நலத்திட்ட உதவிகளை ஏரியாவாரியாகச் செய்வார்கள்.
ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள, வீட்டிலிருந்து சாரட்டு வண்டியில் காலையில் கிளம்புவார் அழகிரி.

ஒவ்வொரு பகுதியிலும் வரவேற்பை ஏற்றுக்கொண்டு, மதியம் ராஜா முத்தையா மன்றத்துக்கு வந்துசேருவார். கரகாட்டம், மயிலாட்டம், செண்டை மேளம், வாடிப்பட்டி டிரம் என்று தொண்டர்கள் பட்டையைக் கிளப்புவார்கள். பல மாவட்டங்களிருந்து பரிசுப் பொருள்களுடன் வருகைதரும் தொண்டர்கள், அவரிடம் கொடுத்து ஆசி வாங்குவார்கள். பிரமாண்ட கேக் வெட்டுவார். அதன் பின்னர், ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உரையாற்றுவார். அனைவருக்கும் கறிசோறு பரிமாறப்படும். இப்படியெல்லாம் பிரமாண்டமாக நடந்துவந்த  பிறந்தநாள் விழா,  நான்கு வருடங்களுக்கு முன் கட்சியை விட்டு நீக்கிய பின்பும் தொடர்ந்தது.

அழகிரி

ஆனால் இந்த ஆண்டு, 'கருணாநிதி மறைந்த கவலையிலிருந்து நான் மீளவில்லை. அதனால், என் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட விரும்பவில்லை. எங்கேயும் என்னை வாழ்த்தி விளம்பரங்கள் வைக்க வேண்டாம். அதேநேரம், ஏழை எளியவர்களுக்குச் செய்யும் நலத்திட்டங்களை மட்டும் செய்யுங்கள்' என்று சில நாள்களுக்கு முன் ஆதரவாளர்களை அழைத்து ஸ்ட்ரிக்டாகக் கூறிவிட்டாராம். அதனால், இன்று அழகிரி வீட்டுக்கு யாரும் வரவில்லை. எப்போதும் பரபரப்பாக இருந்த அப்பகுதி, அமைதியாகத் தெரிந்தது. இதற்கிடையே, தேடிவரும் தொண்டர்களைத்  தன்னுடைய பண்ணை வீட்டில் இன்று சந்திக்கலாம் என்ற தகவலும் வந்து கொண்டிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க