தற்காலிக ஆசிரியர் பணிக்கு போட்டா போட்டி! - நாமக்கல்லில் 1,810 பேர் விண்ணப்பம் | Thousands of people applied for temporary teachers posting in namakal

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (30/01/2019)

கடைசி தொடர்பு:14:10 (30/01/2019)

தற்காலிக ஆசிரியர் பணிக்கு போட்டா போட்டி! - நாமக்கல்லில் 1,810 பேர் விண்ணப்பம்

தற்காலிக ஆசிரியர் பணிக்கு போட்டா போட்டி! - நாமக்கல்லில் 1,810 பேர் விண்ணப்பம்

ழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கடந்த 22-ம் தேதி முதல் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஜாக்டோ-ஜியோ

இதையொட்டி நாமக்கல் பூங்கா சாலையில், கடந்த 23-ம்தேதி முதல் 25-ம் தேதி வரை 3 நாள்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், நேற்றும் சாலைமறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் சுஜாதா தலைமையில், ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இவர்கள், நேற்று காலையில் சாலைமறியலுக்கு வந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒவ்வொருவராகக் கைதுசெய்து வாகனங்களில் ஏற்றி, திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். இதையறிந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், நாமக்கல் பஸ்நிலையம் எதிரில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களைக் கைதுசெய்து வாகனங்களில் ஏற்றிச்செல்ல போலீஸார் முயற்சி செய்தனர். ஆனால், வாகனங்களில் ஏற மறுத்த அவர்கள், கோஷங்கள் எழுப்பியவாறு பூங்கா சாலைக்கு வந்தனர். 

பின்னர், பூங்கா சாலையில் அமர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து, அவர்களைக் கைதுசெய்த போலீஸார், வாகனங்களில் ஏற்றிச்சென்று திருமண மண்டபம் ஒன்றில் தங்கவைத்தனர். இதில், 400 பெண்கள் உள்பட 450 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் 395 பேரை நேற்று இரவு 9 மணிக்கு போலீஸார் விடுவித்தனர். மீதமுள்ள 55 பேர்மீது சட்டவிரோதமாகப் போக்குவரத்துக்கு இடையூறு செய்தல் போன்ற  கூடுதல் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை, மாஜிஸ்திரேட் தனபால் பிப்ரவரி 4-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்களை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துவந்த போலீஸார், பின்னர் சேலம் சிறைக்கு அனுப்பிவைத்தனர். அதேசமயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்ட 21 பேரும் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர். இதேபோன்று, பிற மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7,634 ஆசிரியர்களில், நேற்று காலை நிலவரப்படி 3,696 பேர் பணிக்கு வரவில்லை. இருப்பினும், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், திங்கள் மாலைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும், இல்லையெனில் அவர்கள் பணியிடம் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் என அறிவித்தனர். இதையடுத்து, நேற்று பிற்பகலுக்கு மேல் ஏராளமான ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர். மாவட்டத்தில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 80 சதவிகிதம் பேரும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 70 சதவிகிதம் பேரும் பணிக்கு வந்துவிட்டதாகப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், அவர்களின் பெயர் விவரம் சேகரிக்கப்பட்டுவருவதாகக் கூறினர்.

ஜாக்டோ-ஜியோ

முதல்நாள் அன்று 1,020 பேர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். 2-வது நாளாக நேற்று, 790 பேர் விண்ணப்பம் செய்தனர். இதனால், தற்காலிக ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பித்த நபர்களின் எண்ணிக்கை 1,810 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 57 ஆசிரியர்களுக்குப் பதிலாக உடனடியாக 57 பேர் நியமிக்கப்பட இருப்பதாகவும், நாளை (இன்று) வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு பள்ளிக்கு வருபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, இதர தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதன்மை கல்வி அதிகாரி உஷா கூறினார். இதற்கிடையே, சாலைமறியலில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் இதர ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம்செய்ய அந்தந்தத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க