தமிழகம் முழுவதும் கிளை விரித்து ஏமாற்றிய நிதி நிறுவனம் !  | chit fund cheating 59 crores and people complaint to sebi

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (30/01/2019)

கடைசி தொடர்பு:17:25 (30/01/2019)

தமிழகம் முழுவதும் கிளை விரித்து ஏமாற்றிய நிதி நிறுவனம் ! 

தமிழகம் முழுவதும் கிளை விரித்து ஏமாற்றிய நிதி நிறுவனம் ! 

மிழகம் முழுவதும் நிதி நிறுவன மோசடிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. ஆரணி, வேலூர், விருத்தாசலம், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் `அஸ்யூர் அக்ரோடெக் லிமிடட்’ (Asure Agrow tech Limited) என்ற நிறுவனத்தில் மாதம் தோறும் பணம் செலுத்தும் முதலீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். ஐந்து, ஆறு ஆண்டுகள் தொடர்ந்து பணம் செலுத்தினால் வட்டியுடன் சேர்த்து ஒரு பெரிய  தொகை திரும்பக் கிடைக்கும் என நம்பிச் சேர்ந்த மக்களுக்குக் கடைசியில் மிஞ்சியது ஏமாற்றம்தான்.

நிதி மோசடியால் பாதிக்கப்பட்ட மக்கள்

5 ஆண்டுகள் முடிந்த நிலையில் மக்கள் தாங்கள் செலுத்திய தொகையை அஸ்யூர் அக்ரோடெக் நிறுவனத்திடம் கேட்கும்போது, நிறுவனம் நட்டம் அடைந்து விட்டதால் உடனடியாகப் பணத்தை தங்களின் சொத்துகளை விற்றுதான் மக்களுக்கு தரவேண்டிய தொகையை மீண்டும் தரமுடியும் எனச் சொல்லி வந்துள்ளனர். ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் மக்களுக்குச் சென்று சேர வேண்டிய பணம் முறையாகச் சென்று சேரவில்லை. அதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் தலைவரிடம் முறையிடுகையில் நீங்கள் எங்கள் நிறுவனத்தைப் பற்றி யாரிடமாவது தவறாகக் கூறினீர்கள் என்றால் உங்கள் மீது மான நஷ்ட வழக்கு போடப்படும் என மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அஸ்யூர் டெக் நிறுவனத்தில் ஏஜென்டாக வேலை செய்த மரிய பிரகாசம், ``இந்த நிறுவனம் முதலில் சொல்லிய திட்டங்களால் பல ஏழை எளிய மக்கள் பயனடைவார்கள் என நம்பித்தான் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்தோம். 5 ஆண்டுகள் நிறைவடையும்வரை அந்த நிறுவனம் ஒழுங்காகத்தான் நடந்துகொண்டது. நான் மட்டும் மொத்தம் 500 பேரை இதில் சேர்த்து விட்டுள்ளேன். அவர்களுக்கு மட்டும் சுமார் 85 லட்சம் ரூபாய் தர வேண்டியுள்ளது. ஆனால் இதுவரை எந்தப் பணமும் வந்து சேரவில்லை. அஸ்யூர் அக்ரோடெக் நிறுவனம் எந்தப் பதிலும் சொல்லாததால் இது மாதிரியான நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பான இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் கடந்த 2017-ம் ஆண்டு புகார் அளித்திருந்தோம். அவர்கள் அஸ்யூர் டெக் நிறுவனத்திற்குச் சொந்தமான சொத்துகளைப் பறிமுதல் செய்து, அவற்றை ஏலத்திற்கு விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை எங்களுக்குத் தருவதாகச் சொல்லி இருந்தனர்.

ஆனால், இதுவரை எந்த நல்ல முடிவுகளும் எங்களை வந்து சேரவில்லை. அதிகாரிகளிடம் கேட்டதற்கு அஸ்யூர் அக்ரோடெக் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய சொத்துகளை ஏலத்தில் விடுவதற்குத் தடையாக உள்ளனர். எனக் கூறுகின்றனர். இந்த நிறுவனத்தின் மோசடியால் தினமும் என் வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது” என்றார்.

சென்னையில் அஸ்யூர் அக்ரோடெக் நிறுவனத்தின் ஏஜென்டாக வேலைபார்த்த ரமேஷ் பேசுகையில், ``இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட 1,29,000 பேருக்குச் சேர வேண்டிய 59 கோடி ரூபாயைத் திரும்பச் செலுத்த வேண்டும் எனக் கடந்த 2016-ம் ஆண்டே இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் இன்றுவரை நாங்கள் வீதியில்தான் இருக்கின்றோம். சிலருக்குப் பணத்திற்கு பதில் இடம் தருவதாகச் சொல்லி துறையூர் அருகே வீரமச்சம்பட்டியில் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தை அளந்து கொடுத்தனர். அந்த நிலத்தையும் பத்திரப்பதிவு செய்து தரவில்லை. இந்த நிலையே நீடித்தால் அரசு எங்கள் பிரச்னைகளை தீர்க்கும்வரை நான் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளேன்” என்றார்.

சாந்தி

இந்தப் பண மோசடியால் பாதிக்கப்பட்ட சாந்தி என்பவர் பேசுகையில், ``நான் வீட்டு வேலை செய்து சிறிது சிறிதாகச் சேர்த்த பணத்தை எதிர்காலத்திற்கு நல்ல முதலீடாக அமையும் என நினைத்து இதில் முதலீடு செய்தேன், எங்கள் வீட்டைச் சுற்றி வசித்து வரும் 12 பேரையும் இந்தத் திட்டத்தில் சேர்த்துவிட்டேன், கடைசியில் ஏமாந்ததுதான் மிச்சம். நான் சேர்த்துவிட்டவர்கள் எல்லாம் தினமும் வீட்டுப்படி ஏறி வந்து கேள்வி கேட்கிறார்கள். இதனால் நான் ஐந்து லட்சம் கடனாளியாக உள்ளேன்” என்றார்.

நிதி மோசடி சம்பந்தமாக அரசு, பல முறை எச்சரிக்கை வழங்கியும் மக்கள் தொடர்ந்து ஏமாந்துகொண்டுதான் இருக்கின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்