`நாங்க கனவுலயும் நினைக்கலை!' - கோரிக்கையை நிறைவேற்றி இளைஞர்களை நெகிழவைத்த எம்.பி | MP DK Rengarajan, who has allocated 25 lakhs for additional library building!

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (30/01/2019)

கடைசி தொடர்பு:15:40 (30/01/2019)

`நாங்க கனவுலயும் நினைக்கலை!' - கோரிக்கையை நிறைவேற்றி இளைஞர்களை நெகிழவைத்த எம்.பி

குளித்தலை கிளை நூலகம்

இளைஞர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, குளித்தலை கிளை நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்ட ரூபாய் 25 லட்சம் ஒதுக்கி, இளைஞர்களை நெகிழவைத்திருக்கிறார், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன்.
 

குளித்தலை கிளை நூலகம் முன்பு இளைஞர்கள்

கரூர் மாவட்டம் குளித்தலை காவேரி நகரில், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கீழ் கிளை நூலகம் ஒன்று செயல்பட்டுவருகிறது. 1955ல் தொடங்கப்பட்ட இந்த நூலகம், ஒரே ஒரு சிறு கட்டடத்திலேயே இயங்கிவருகிறது. அதை மேம்படுத்தும்படி அரசுக்கு பலமுறை இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கோரிக்கை வைத்துவந்துள்ளனர். ஆனால், அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இந்நிலையில்தான், குளித்தலை பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கரானுக்கு, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கோரிக்கை மனு அனுப்பியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, குளித்தலை கிளை நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்ட, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 25 லட்சத்தை ஒதுக்கி, இளைஞர்களை நெகிழவைத்திருக்கிறார். தங்கள் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கிய டி.கே.ரெங்கராஜனுக்கு நன்றி தெரிவித்து, குளித்தலை பகுதி முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள்.

 பிரபாகரன்இது சம்பந்தமாக, அந்த கூட்டமையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பிரபாகரனிடம் பேசினோம்.
 "நாங்க அரசுகிட்ட பலமுறை கோரிக்கை வச்சும் ஒண்ணும் நடக்கலை. ஆனா, டி.கே.ரெங்கராஜனிடம் கோரிக்கை வச்சதும், எங்களை சாதாரணமா நினைக்கலை. மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு, குளித்தலை ஒன்றியக்குழுவை விட்டு விசாரிக்கச் சொன்னார். நாங்கள் கேட்கும் கோரிக்கையில் உண்மை இருப்பதை உணர்ந்து, கிளை நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்ட 25 லட்சம் ரூபாயை ஒதுக்கி, எங்களை நெகிழ வைத்திருக்கிறார். இளைஞர்களாகிய நாங்க வச்ச கோரிக்கையை ஏற்று, இவ்வளவு பெரிய நிதியை ஒதுக்குவார்னு நாங்க கனவுலயும் நினைக்கலை. அவருக்கு குளித்தலை இளைஞர்கள் சார்பில் கோடானகோடி நன்றிகள். 1955ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கிளை நூலகம், முதலில் வாடகைக் கட்டடத்தில்தான் இயங்கிவந்திருக்கு. 1984ல்தான் இந்தக்  கட்டடத்துக்கு மாற்றப்பட்டிருக்கு.

இந்த நூலகத்தில், 52 ஆயிரம் நூல்கள் இருக்கு. இந்தக் கிளை நூலகம் பி கிரேடிலேயே இருக்கு. இதை ஏ கிரேடுக்கு மாத்தச் சொல்லி நாங்க அரசுக்கு தொடர் கோரிக்கை வச்சுக்கிட்டு இருக்கோம். இந்த நூலகத்தை காலத்துக்கு ஏற்ப டிஜிட்டலாக, நவீனமாக மாற்றச் சொல்லியும் கோரிக்கை வச்சுக்கிட்டு வர்றோம். குளித்தலைப் பகுதியில் உள்ளவர்கள், விவசாயக் குடும்பங்கள். அரசு வேலைக்குப் படிப்பதற்காக கரூருக்கோ, திருச்சிக்கோதான் இங்குள்ள மாணவர்கள், இளைஞர்கள் போகவேண்டி இருக்கு. இந்த நூலகத்தைத் தரம் உயர்த்தினால், இங்கேயே மாணவர்கள் அரசு வேலை, போட்டித் தேர்வுகளுக்குப் படிக்க இயலும்.

டி.கே.ரெங்கராஜனுக்கு நன்றி தெரிவிக்கும் போஸ்டர்

அதேபோல, இங்கு டி.என்.பி.எஸ்.சி பயிற்சி வகுப்புகள் நடத்த அரசு அனுமதி தரணும். அதற்காக, தனி இடமும் அமைத்துத் தரணும். ஒரு வசதியும் இல்லாத இந்த நூலகத்தில் படித்த ஷாஜகான் என்பவரும், இன்னொருவரும் இப்போது இஸ்ரோவில் வேலைபார்ப்பதாகச் சொல்றாங்க. பலர் அரசு வேலைக்குத் தேர்வாகியிருக்காங்க. இந்தக் கிளை நூலகத்தை ஏ கிரேடாக மாற்றித் தரம் உயர்த்தினா, குளித்தலை பகுதி விவசாயிகள் வீட்டுப் பிள்ளைகள் அரசு வேலைகளுக்குப் போகும் வாய்ப்பு ஏற்படும். தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை உடனே எடுக்க ஆவன செய்யணும்" என்றார்.