சம்பளம் மட்டுமா பிரச்னை? ஆசிரியர்கள் போராட்டத்தின் நோக்கம் என்ன?! | "We are fighting for the future generation, not for salary", says Government teachers

வெளியிடப்பட்ட நேரம்: 16:29 (30/01/2019)

கடைசி தொடர்பு:16:29 (30/01/2019)

சம்பளம் மட்டுமா பிரச்னை? ஆசிரியர்கள் போராட்டத்தின் நோக்கம் என்ன?!

"பணியிடங்களை நிரப்பாமல், அரசாணை 56-ஐ பின்பற்றி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவுள்ளனர். இதனால், அரசுப் பணியிடங்களே இனி வரும் காலங்களில் இல்லாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. இனி, இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது கனவாக மட்டும்தான் இருக்க முடியும்."

சம்பளம் மட்டுமா பிரச்னை? ஆசிரியர்கள் போராட்டத்தின் நோக்கம் என்ன?!

ரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஒருபுறம் போராட்டம் நடத்த, `எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது, உடனே பணிக்குத் திரும்புங்கள்’ எனத் தமிழக அரசு மறுக்க, ஒரு வாரமாகத் தகித்துக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு. இந்தச் சூழலில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, தலைமைச் செயலகத்தின் பணியாளர்களும் இன்று (30.01.2019) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தொடர்ந்து சம்பளத்துக்காகப் போராடி வருகின்றனர். `எவ்வளவு பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும்போது, கை நிறைய சம்பளம் வாங்கும் இவர்கள் எதற்காகப் போராடுகின்றனர்' எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆசிரியர்கள் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொடக்கப் பள்ளி ஆசிரியரும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரச் செயலாளருமான சந்திரகுமாரிடம் பேசினோம்.  ``சம்பளத்தை மட்டும் முதன்மையாக வைத்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. எதிர்காலத் தலைமுறையினருக்கும் சேர்த்துத்தான் போராடுகிறோம். இதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள் போராட்டம்தற்போது பின்பற்றப்படும் ஓய்வூதியத் திட்டத்துக்கு பதிலாக 2003-ம் ஆண்டுக்கு முன்பு பின்பற்றப்பட்ட  பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2009-ம் ஆண்டுக்குப் பின் நியமிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படைச் சம்பளம் 20,600 ரூபாய் கிடைக்கிறது. ஆனால், மத்திய அரசு அடிப்படைச் சம்பளமாக 35,000 ரூபாய் வழங்குகிறது. இந்த வேறுபாட்டைக் களைய வேண்டும். ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையைத் தமிழக அரசு 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமல்படுத்தியது. ஆனால், மத்திய அரசு இதை 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமல்படுத்தி உள்ளது. தமிழக அரசு, 21 மாதங்களுக்கான நிலுவைத் தொகை வழங்கிட வேண்டும். மேலும், தொகுப்பூதியத்தை ஒழித்து விட்டு காலமுறை ஊதியத்தை வழங்கிட வேண்டும்.

தமிழக அரசு, தற்போது எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளைத் தொடங்கி இருக்கிறது. இதற்கு இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தத் திட்டமிட்டு இருக்கிறது. குழந்தைகளுக்குப் பாடம் நடத்த  மாண்டிசேரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்தினார்கள். பின்பு, 1-5-ம் வகுப்பு என்றானது. தற்போது எல்.கே.ஜி., யு.கே.ஜி என்று இளநிலை ஆசிரியர்களாக மாற்றும் வேலை நடந்து வருகிறது.

மாணவர்கள் குறைவாக உள்ள 3,500 பள்ளிகளையும், அருகில் உள்ள நடுநிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் பணியையும் ஆரம்பித்திருக்கிறது அரசு. மேலும், பள்ளியில் ஐந்து ஆசிரியர்கள் என்ற எண்ணிக்கையில்தான் இருக்க வேண்டும் என்றாகி இருக்கிறது. இதனால், ஏற்கெனவே, அருகில் உள்ள பள்ளிகள் தொலைவில் உள்ள பள்ளிகளாக மாறும். மாணவர்கள் கல்விக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கும். இந்தப் பள்ளியில் வேலை பார்த்து வரும் ஆசிரியர்களும், சத்துணவுப் பணியாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.

ஆசிரியர்கள் போராட்டம்

தற்போது, தமிழக அரசுத் துறைகளில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்பாமல், அரசாணை 56-ஐ பின்பற்றி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவுள்ளனர். இதனால், அரசுப் பணியிடங்களே இனி வரும் காலங்களில் இல்லாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. இனி, இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது கனவாக மட்டும்தான் இருக்க முடியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பழைய ஓய்வூதியம் முறை கொண்டு வர ஆய்வுக்குழு அமைத்தார். ஊதிய வேறுபாடுகளைக் களைய வேண்டும் என்பதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆய்வு மேற்கொண்டு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 

நாங்கள் எங்களுக்காகப் போராடவில்லை. மாணவர்களுக்காகவும், பெற்றோர்களுக்காகவும்தான் போராடுகிறோம். தற்போது கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகளில் குறிப்பிட்ட அளவு மாணவர்கள் படிக்கின்றனர். இங்குள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீடு என்ற போர்வையில் அரசுப் பணம் தனியார் பள்ளிகளுக்குச் செல்கிறது. இதைத் தடுத்தாலே அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும்" என்றார். 

`மத்திய அரசு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, தமிழ்நாட்டில் ஊதியக்குழுவை அமைத்து, கடுமையான நிதிச் சுமைக்கு இடையிலும், அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கியுள்ளது. இதனால், ஆண்டுக்கு 14,500 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டிருக்கிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முறையாகப் பராமரிக்கப்படுகிறது. இதனால் அரசு ஆசிரியர்களுடன் முதலமைச்சர் பேச்சு வார்த்தை நடத்த மாட்டார்' எனத் தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்தப் போராட்ட வழக்குகள் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகின்றன. 


டிரெண்டிங் @ விகடன்