பாராட்டு விழா இல்லை; நிதி திரட்டும் விழா! - இளையராஜா 75 நிகழ்ச்சி தடை வழக்கு ஒத்திவைப்பு | Madras HC adjournment ilayaraja 75 Case

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (30/01/2019)

கடைசி தொடர்பு:16:15 (30/01/2019)

பாராட்டு விழா இல்லை; நிதி திரட்டும் விழா! - இளையராஜா 75 நிகழ்ச்சி தடை வழக்கு ஒத்திவைப்பு

1,000 படங்களுக்குமேல் இசையமைத்தவர் இளையராஜா. அவரைக் கௌரவிக்கும் விதமாகத் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் `இளையராஜா 75’ விழா, பிரமாண்டமான முறையில் கொண்டாடப்பட இருக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் இளையராஜாவின் 75 வது பிறந்த நாளை குறிப்பிடும் வகையிலும், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இவ்விழாவில் கூடவுள்ளனர்.

இளையராஜா 75

இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரி தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இன்று உயர் நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது இந்த வழக்கு. 

அப்போது மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ‘இளையராஜா 75 நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. ஆப் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. அது தொடர்பான ஒப்பந்தத்தைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். பாராட்டு விழா எனக் கூறிவிட்டு, நிதி திரட்டும் நிகழ்ச்சியாக நடத்துகின்றனர். 7 கோடி வரை நிதி திரட்டுவதாக கூறியுள்ளனர். ஆனால், நிகழ்ச்சி ஏற்பாடு தொடர்பாக மேற்கொண்ட ஒப்பந்தத்தில் எவ்வளவு தொகை எனக் கூறப்படவில்லை. அதனால் அனைத்தையும் மேற்பார்வையிட நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டது.

உயர்நீதிமன்றம்

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், “இந்த நிகழ்ச்சி தொடர்பான ஒப்பந்தங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு வீடு கட்டித்தர நிதி திரட்டும் நோக்கில் இளையராஜா நிகழ்ச்சி நடத்த வேண்டும் என 2016-ம் ஆண்டே முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விவரங்கள் கணக்கு வழக்குகள் நடக்க இருக்கும் பொதுக்குழுவில் சமர்பிக்கப்படும். அனைத்து உறுப்பினர்களையும் கலந்தாலோசித்துதான் இளையராஜா 75 நிகழ்ச்சி குறித்து முடிவெடுக்கப்பட்டது. ஒய்.எம்.சி.ஏ வளாகத்துக்காக 35 லட்சமும் இளையராஜாவுக்கு 25 லட்சம் இதுவரை கொடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.