அறிவொளியைக் குறிவைத்த விஜிலென்ஸ்! - போலி பில்களால் அதிர்ந்த பள்ளிக் கல்வித்துறை | Vigilance raid at Chennai DPI office

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (30/01/2019)

கடைசி தொடர்பு:17:55 (30/01/2019)

அறிவொளியைக் குறிவைத்த விஜிலென்ஸ்! - போலி பில்களால் அதிர்ந்த பள்ளிக் கல்வித்துறை

தமிழ்நாடு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் இன்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். புதிய பாடத்திட்டத் தயாரிப்பு பணிகளுக்காக ஆசிரியர்களை வரவழைத்ததில் போலி பில் தயாரிக்கப்பட்டதாக இயக்குநர் அறிவொளி மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. அதன் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் பள்ளிக்கல்வித்துறை துறையில் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டதில்லை. முதன்முதலாக அறிவொளியை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தச் சோதனையால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் அதிகாரிகள். 

பள்ளிக் கல்வி இயக்கம்

விஜிலென்ஸ் சோதனை குறித்து நம்மிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர், `` புதிய பாடத்திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக அரசு நிர்வாகத்தில் இருந்து ஏராளமான தலையீடுகள் இருந்தன. பாடத்திட்டத்தைத் தயாரிப்பதற்கு மாநில ஆசிரியர் பயிற்சி இயக்ககத்துக்கு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு எப்படிக் கொண்டு செல்வது, அதற்குத் தேவையான வழிகாட்டல்கள் என்ன, ஆசிரியர் வழிகாட்டு கையேட்டைத் தயாரிப்பது, ஒவ்வொரு பாடங்களையும் எப்படி நடத்துவது, எவ்வளவு நேரம் நடத்த வேண்டும், பாடத்துக்கான குறிப்புகளைத் தயார் செய்யும் முறை, மதிப்பீடு செய்யும் முறை ஆகியவை குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டன. இதை ஆய்வுபூர்வமாகக் கண்காணித்து கல்வி நிபுணர்களும் ஆலோசனை அளித்தனர். இதில்தான் போலியான பில்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சோதனை நடத்தியுள்ளனர். இதற்கான ஆதாரங்களை அறிவொளியின் செயல்பாட்டுக்கு எதிரானவர்கள், விஜிலென்ஸ் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்’’ என்றவர், 

அறிவொளி

`` ஆசிரியர் பயிற்சி இயக்ககம் மட்டுமல்லாமல், அறிவொளி இயக்குநராக இருந்த துறைகளில் எல்லாம் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் அண்ணா நூலகம் உருவாக்கியபோது, நூலகத்துறை இயக்குநராக முன்னின்று செயல்பட்டவர் அறிவொளி. இந்த நூலக உருவாக்கத்திலும் திறப்பு விழா நிகழ்ச்சியிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக அப்போதே புகார் எழுந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலும் இதுதொடர்பான விவரங்கள் வெளியானது. இதுதொடர்பாக, அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் விசாரணை நடத்தப்படலாம் என நூலகத் துறை அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், பெரிதாக எந்த விசாரணையும் நடைபெறவில்லை. 

அறிவொளி

இதையடுத்து, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் இயக்குநராக அறிவொளி நியமிக்கப்பட்டார். அரசுப் பள்ளிகளுக்கான ஆய்வகக் கருவிகள், மேஜை, நாற்காலிகள், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் சேலத்தைச் சேர்ந்த சிலர், அறிவொளியின் கைப்பாவையாகச் செயல்படுவதாகப் புகார் எழுந்தது. இதில் பல கோடி ரூபாய்கள் முறைகேடு நடந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இதன் பேரிலும் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. ஆசிரியர் பயிற்சி இயக்ககத்திலும் முறைகேடு புகார்கள் வந்தன. அனைத்தும் ஆதாரபூர்வமாகச் சென்றதால், விசாரணைக்கு உத்தரவிட்டது முதல்வர் அலுவலகம். இந்தச் சோதனையின் காரணமாக, அறிவொளிக்கு நெருக்கமான சேலம் புள்ளிகள் செல்போனை அணைத்துவிட்டனர். விஜிலென்ஸ் சோதனை நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார் நிதானமாக.