`இதெல்லாம் தி.மு.க ஐ.டி விங் பண்ற வேலை!’ - கொதிக்கும் தங்க தமிழ்ச்செல்வன் | thanga tamil selvan refused that he goes to dmk

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (30/01/2019)

கடைசி தொடர்பு:18:40 (30/01/2019)

`இதெல்லாம் தி.மு.க ஐ.டி விங் பண்ற வேலை!’ - கொதிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்

தி.மு.க-வில் தான் ஐக்கியமாகப்போவதாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்று தங்க தமிழ்ச்செலவன் மறுத்துள்ளார்.

 டி.டி.வி.தினகரனின் தளபதிகளில் ஒருவரும், அ.ம.மு.க. கொள்கை பரப்புச் செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க-வுக்கு தாவப் போவதாகக் கடந்த இரு நாள்களாகச் சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது. இதை முற்றிலுமாக மறுத்துள்ள தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க ஐ.டி விங் திட்டமிட்டு தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

அ.ம.மு.க-வின் கொங்கு மண்டல தளகர்த்தகராக இருந்தவர் செந்தில்பாலாஜி. தினகரனோடு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சமீபத்தில் தி.மு.க-வில் ஐக்கியமானார். கட்சியில் இணைந்த சிறிது நாள்களிலேயே கரூர் மாவட்டப் பொறுப்பாளர் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. மேலும், அ.ம.மு.க-விலுள்ள சில முக்கிய நிர்வாகிகளை தி.மு.க-வுக்கு அழைத்து வரும் பொறுப்பும் செந்தில்பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தங்க தமிழ்ச்செல்வன்

18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் மேல்முறையீடு செல்லலாம் என்று தங்க தமிழ்ச்செல்வன் கருதியிருந்தார். அ.தி.மு.க-வோடு இணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பது அவரது கணக்கு. ஆனால், தினகரனின் கணக்கோ தங்கத்துக்கு நேர்மாறாக உள்ளது. மேல்முறையீடு செல்ல முட்டுக்கட்டைப் போட்டவர், அ.தி.மு.க-வுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை என்று தீர்மானமாகக் கூறிவிட்டார். இதில் தங்க தமிழ்ச்செல்வன் ஏக அப்செட்.

இந்தச் சூழலை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் செந்தில்பாலாஜி, தினந்தோறும் தங்கத்துடன் பேசிவருவதாகவும், விரைவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க-வில் இணையப்போவதாகவும், கடந்த இரண்டு நாள்களாக செய்தி இறக்கை கட்டிப் பறக்கிறது. 

தங்கத் தமிழ்ச்செல்வன்

இதுகுறித்து தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். ``இது தி.மு.க ஐ.டி விங் தரப்பு திட்டமிட்டு பரப்பும் வதந்தி. நான் அ.ம.மு.க-வை விட்டு எங்கேயும் போகப்போவதில்லை. இதுமாதிரியான செய்திகள் பலமுறை எழுப்பப்பட்டு கரைந்து போயிருக்கிறது. இந்த வதந்தியும் கரைந்து போகும்!’’ என்றார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ``நான் அ.தி.மு.க குடும்பத்தில் இருந்து வந்தவன். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் தொண்டன். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் விசுவாசி. அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தபோதும் தியாகத் தலைவி சின்னம்மாவின் தலைமையை ஏற்று வந்தவன். துணை பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் டி.டி.வி.தினகரனுடன் அரசியலில் பயணித்து வருகிறேன். நான் தி.மு.க-வில் சேரப்போவதாகச் சொல்வது கற்பனைக்கு எட்டாதது. அதற்கு வாய்ப்பே இல்லை’’ என்று தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.