`அரசியல் காலண்டரில் கடைசிப் பக்கம் இல்லை!’ - அழகிரியை வாழ்த்திய ரஜினி | Rajini's birthday message to Alagiri

வெளியிடப்பட்ட நேரம்: 17:33 (30/01/2019)

கடைசி தொடர்பு:18:32 (30/01/2019)

`அரசியல் காலண்டரில் கடைசிப் பக்கம் இல்லை!’ - அழகிரியை வாழ்த்திய ரஜினி

துரை தயாநிதியின் திருமணத்துக்கு மதுரைக்கே நேரில் வந்து வாழ்த்தினார் ரஜினி. ஒவ்வொரு விசேஷ தினங்களிலும் இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லிக்கொள்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.

`அரசியல் காலண்டரில் கடைசிப் பக்கம் இல்லை!’ - அழகிரியை வாழ்த்திய ரஜினி

முன்னாள் முதல்வர் கருணாநிதி மூத்த மகனான அழகிரிக்கு இன்று 68-வது பிறந்தநாள். ஆனால், அவர் மதுரையில் இல்லை. `அவர் வெளிநாடு செல்லவில்லை. பிறந்தநாளைக் கொண்டாடும் மனநிலையிலும் அவர் இல்லை' என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். 

அழகிரி, ரஜினி

தென்மண்டல தி.மு.க-வில் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்த அழகிரியின் ஒவ்வொரு பிறந்தநாளையும் திருவிழாபோலக் கொண்டாடி மகிழ்ந்தனர் அவரின் ஆதரவாளர்கள். தி.மு.க-விலிருந்து கட்டம் கட்டப்பட்டப் பிறகும், அவரது பிறந்தநாளில் அதிரடியைக் காட்டி வந்தனர். சாரட் வண்டியில் பவனி, சுவரொட்டிகள், விதம்விதமான ஃப்ளெக்ஸ்கள், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் என ஊரையே கூட்டி அதகளப்படுத்துவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இந்தமுறையும் அதேபோல் நடத்துவதற்காக அழகிரியை அணுகியுள்ளனர். இதற்குப் பதில் அளித்தவர், `பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம். என்னை வாழ்த்தி எந்த சுவரொட்டிகளையும் வைக்க வேண்டாம்' என உறுதியாகக் கூறிவிட்டார். ``கருணாநிதி மறைந்த துக்கத்தில் இருப்பதால்தான் பிறந்தநாளை அவர் கொண்டாடவில்லை" என விவரித்த அவரின்நெருங்கிய ஆதரவாளர் ஒருவர், 

ரஜினி

``காலையில் இருந்தே அவருடைய செல்போனுக்கு ஏராளமான வாழ்த்து அழைப்புகள் வந்தன. அவர்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக் கொண்டார். பிறந்தநாளைக் கொண்டாடாமல் இருப்பதற்கான காரணத்தையும் தெரியப்படுத்தினார். இன்று அவருக்கு வந்த அழைப்புகளில் மிகவும் சிறப்பானது, நடிகர் ரஜினிகாந்த்தின் வாழ்த்துதான். அவர் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில், ``நீங்கள் ஒரு நேர்மையான, நல்ல மனிதர். அரசியல் காலண்டரில் கடைசிப் பக்கம் என்பது யாருக்குமே கிடையாது. எதிர்காலத்தில் நீங்கள் எழுந்து வருவீர்கள்' எனக் கூறியிருக்கிறார். இந்த வாழ்த்து அழகிரியை நெகிழ வைத்தது’’ என்றவர், 

அழகிரி

``மு.க.அழகிரிக்கும் ரஜினிக்கும் இடையில் நீண்டகாலமாக நட்பு உள்ளது. இளம் வயதில் இருந்தே அவருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் அழகிரி. சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்றபோதும், ரஜினியுடனான நட்பை மட்டும் அவர் விடவில்லை. துரை தயாநிதியின் திருமணத்துக்கு மதுரைக்கே நேரில் வந்து வாழ்த்தினார் ரஜினி. ஒவ்வொரு விசேஷ தினங்களிலும் இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லிக் கொள்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.

அழகிரி

கடந்த 2017 டிசம்பர் மாதம், அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார் ரஜினி. இந்த அறிவிப்புக்குப் பிறகு, கோபாலபுரத்தில் கருணாநிதியைச் சந்தித்து ஆசி வாங்கச் சென்றார் ரஜினி. அப்போது பேட்டியளித்த ஸ்டாலின், `இது பெரியார் பிறந்த மண், ஆன்மிக அரசியலுக்கு இங்கே இடமில்லை’ என்றார். ஆனால் அழகிரியோ, `அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்துச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது, சென்னை செல்லும்போது ரஜினிக்கு நேரடியாக வாழ்த்துச் சொல்லப்போகிறேன்' என்றார். அந்தளவுக்கு ரஜினி மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். அதையொட்டியே பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்" என்றார் உற்சாகமாக.