`நடக்குமா, நடக்காதா..?’ வேலைநிறுத்தத்தில் தொடரும் குழப்பம்! | Whether Tamilnadu secretariat employees support Jacto Jio protest or not?

வெளியிடப்பட்ட நேரம்: 19:43 (30/01/2019)

கடைசி தொடர்பு:19:43 (30/01/2019)

`நடக்குமா, நடக்காதா..?’ வேலைநிறுத்தத்தில் தொடரும் குழப்பம்!

"துறைவாரியாக எத்தனை பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனக் கணக்கிட்ட பிறகுதான், முழுமையான எண்ணிக்கை தெரியவரும். சங்க நிர்வாகிகளுடன் மீண்டும் பேச்சு நடத்திய பின்னரே, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கப்படும்” - தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி.

`நடக்குமா, நடக்காதா..?’ வேலைநிறுத்தத்தில் தொடரும் குழப்பம்!

மிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், பழைய ஓய்வூதிய முறையையே அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் ஊதிய விகிதங்களை அளித்து, மாநில அரசு ஊழியர்களின் ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வாரக் காலமாக  நடைபெற்று வரும் போராட்டம் நீதிமன்றத்திலும் விசாரணையில் உள்ளது. `அடுத்த ஒரு மாதத்துக்குள் ஆண்டு இறுதித் தேர்வுகளும் அரசு பொதுத் தேர்வுகளும் தொடங்கவுள்ள நிலையில் ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு, மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும்’ எனத் தமிழக அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஜனவரி 30-ம் தேதிக்குள் வேலைக்குத் திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டு, அந்த இடங்களுக்குத் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தலைமை செயலகம்

இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அரசுக் கல்லூரிப் பேராசிரியர்களும் கடந்த சில தினங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் அரசின் கவனத்தை ஈர்க்கும்விதமாக, ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. அதாவது, `ஜனவரி 30-ம் தேதி தலைமைச் செயலக ஊழியர்களின் போராட்டம் நடைபெறும்' என அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே, ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் தலைமைச் செயலக ஊழியர்களும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டு அரசுக்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தினர்.

தலைமைச் செயலக அதிகாரிகள், ஊழியர்களின் போராட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், “தலைமைச் செயலக ஊழியர்களின் அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அரசு அதிகாரிகள், சட்டத்தை மீறி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது தவறான வழிமுறை. எனவே, தலைமைச் செயலக ஊழியர்கள் யாருக்கும் ஜனவரி 30-ம் தேதி தற்செயல் விடுப்பு (casual leave) வழங்கப்பட மாட்டாது. தவிர, ஒப்பந்த ஊழியர்களாக, தொகுப்பு ஊதியம் அடிப்படையில் பணியாற்றி வருபவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், அவர்கள் உடனடியாகப் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அரசு ஊழியர்கள் போராட்டம் - வேலைநிறுத்தம்

மகாத்மா காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ம் தேதி தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள ராணுவ மைதானத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் செயலக அதிகாரிகள், செயலக ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்குபெற்று, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுப்பது வழக்கம். இந்நிலையில் தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டம் அறிவித்துள்ளதால் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு வழக்கப்படி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், “90 சதவிகித தலைமைச் செயலக ஊழியர்கள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வில் பங்கு பெற்றனர்” எனத் தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து பீட்டர் அந்தோணிசாமி மேலும் பேசுகையில், ``தமிழக அரசு ஊழியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாகப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். அதேபோல் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண் 56-ஐத் திரும்பப்பெற வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காகக் கைது செய்யப்பட்ட, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு அதிகாரிகளை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளோம். இது மாதிரியான கவனஈர்ப்புப் போராட்டத்தை ஏற்கெனவே பலமுறை நாங்கள் நடத்தினோம். ஆசிரியர்கள் மீண்டும் பணிக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையும். எத்தனை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற சரியான தகவல் வந்து சேரவில்லை.  துறைவாரியாக எத்தனை பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனக் கணக்கிட்ட பிறகுதான், முழுமையான எண்ணிக்கை தெரியவரும். சங்க நிர்வாகிகளுடன் மீண்டும் பேச்சு நடத்திய பின்னரே, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கப்படும்” என்றார்.

இந்த நிலையில், தொடர் ஆலோசனைக்குப் பிறகு ஜாக்டோ- ஜியோ அமைப்பு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளது. 


டிரெண்டிங் @ விகடன்