கும்பகோணம் வீர சைவ பெரிய மடத்தில் நடக்கும் மோதலால் ஆன்மிக வட்டாரத்தில் பரபரப்பு! | clash between two sides create panic in Kumbakonam veera saiva madam

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (30/01/2019)

கடைசி தொடர்பு:20:50 (30/01/2019)

கும்பகோணம் வீர சைவ பெரிய மடத்தில் நடக்கும் மோதலால் ஆன்மிக வட்டாரத்தில் பரபரப்பு!

கும்பகோணத்தில் உள்ள பழைமை வாய்ந்த மடமான வீரசைவ பெரிய மடத்துக்கு ஏற்கெனவே மடாதிபதி உள்ள நிலையில் மடத்தின் நிர்வாகக் குழுவை சேர்ந்தவர்கள் புதிய மடாதிபதியைப் பொறுப்பேற்க வைத்தனர். இதனால் ஏற்கெனவே மடாதிபதியாகச் செயல்பட்டு வந்தவரின் ஆதரவாளர்கள் புதிதாகப் பொறுப்பேற்றவரையும், அவரின் ஆதரவாளர்களையும் மடத்தைவிட்டு விரட்டியடித்தனர். இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் ஆன்மிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலஸ்ரீ  ஜெகத்குரு நீலகண்ட சாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள்

கும்பகோணம் மகாமகக் குளத்தின் அருகில் வீரசைவ பெரிய மடம் உள்ளது. இந்த மடம் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த மடத்துக்கு கர்நாடகா, திருவாரூர், தாராசுரம், இலங்கை உள்ளிட்ட பல இடங்களில் கிளைகள் உள்ளதோடு கோடிக்கணக்கில் மதிப்புடைய  சொத்துகளும் உள்ளது. மேலும், இந்த மடம் லிங்காயத் சமூகத்தைச் சோ்ந்ததாகும். இத்தகைய சிறப்பு பெற்ற மடத்தில் 97-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஜெகத்குரு நீலகண்ட சாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த நிலையில் மடத்தின் நிர்வாகக் குழுவினர் நீலகண்ட சாரங்கத் தேசிகேந்திர சுவாமிகள் மீது ரூ.80 கோடி மோசடி செய்துவிட்டதாகக் குற்றச்சாட்டை முன்வைத்து, அவரைப் பதவிலியிலிருந்து நீக்கியதாகக் கூறினர்.

புதிய மடாதிபதி பதவியேற்பு

பின்னர் நேற்று கும்பகோணம் வீர சைவ மடத்தில் நிர்வாகக் குழுவின் ஒப்புதலோடு, சித்திரதுர்கா மடத்தின் ஸ்ரீ சிவமூர்த்தி முருக சாராணாரூ பீடாதிபதி, ஸ்ரீ முருகராஜேந்திர பெரிய மடாதிபதி ஆகியோர் கும்பகோணம் வீரசைவ மடத்துக்கு 30 வயது நிரம்பிய ஸ்ரீ பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமியாகப் புதிய மடாதிபதியாக நியமித்து பட்டாபிஷேகம் செய்து வைத்தனர். இந்தத் தகவல் பெங்களூருக்குச் சென்றிருந்த நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகளுக்குத் தெரிய வந்ததும் உடனே பெங்களூரிலிருந்து புறப்பட்டு கும்பகோணத்துக்கு நேற்று நள்ளிரவு வந்தார். அவருடன் ஆதரவாளரும் வந்தனர். இரவு நேரம் என்பதால் மடம் பூட்டப்பட்டிருந்தது. பின்னர் மடத்தின் பூட்டுகளை நீலகண்ட சாரங்கதேசிகேந்திர சுவாமியின் ஆதரவாளர் உடைத்து உள்ளே சென்றனர். மடத்தினுள் இருந்த புதிய மடாதிபதியின் படங்களை அடித்து நொறுக்கியும் கிழித்தும் எரிந்தனர். அப்போது புதிதாகப் பொறுப்பேற்ற மடாதிபதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடித்து, மடத்தைவிட்டு வெளியேற்றினர். சிலர் அடிதாங்க முடியாமல் மடத்தைவிட்டு அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது அவர்களுக்குத் தெரிந்த கன்னட மொழியில் மட்டுமே விட்டுவிடுங்கள் எனக் கெஞ்சினர்.

பின்னர் மடாதிபதியின் இருக்கையில் நீலகண்ட சாரங்கதேசிகேந்திர சுவாமிகள் அமர்ந்தார்.அவருடன்  வந்த ஆதரவாளர்களும் மடத்தில் இருந்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை நீலகண்ட சாரங்கதேசிகேந்திர சுவாமிகள் செய்தியாளர்களிடம் சந்தித்து கூறியதாவது, இந்த மடம் பாரம்பர்யமான மடமாகும். இந்த மடத்துக்குக் கோடிக்கணக்கான சொத்துகள் உள்ளன. தற்போது பெங்களூரில் மெட்ரோ ரயில் திட்டப்பணிக்காக மடத்தில் இடங்கள் கையகப்படுத்தப்பட்ட வகையில் மடத்துக்கு இழப்பீடாக ரூ.120 கோடி வரை பணம் வங்கியில் வரவு வைக்கப்பட்டது. மடத்துக்குச் சொந்தமான நிதியிலிருந்து நிர்வாகக் குழுவில் உள்ள மூவர் தலா ரூ.5 கோடி தர வேண்டும் எனக் கேட்டனர். நான் ஒரு பைசாகூட தர முடியாது என்றதும், நிர்வாகக் குழுவில் உள்ள சிலர் சித்திரதுர்கா மடத்தின் ஸ்ரீ சிவமூர்த்தி முருக சாராணாரூ பீடாதிபதி ஸ்ரீ முருகராஜேந்திர பெரிய மடாதிபதியும் சேர்ந்துகொண்டு, நான் கும்பகோணத்தில் இல்லாத நேரம் பார்த்து இங்கு வந்து புதிய மடாதிபதி நியமனம் என நாடகம் நடத்தியுள்ளனர்.

ஸ்ரீலஸ்ரீ  ஜெகத்குரு நீலகண்ட சாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள்

இந்த மடத்துக்கு நான்தான் மடாதிபதி நான்தான் மற்றவருக்கு பட்டாபிஷேகம் செய்து மகுடம் சூட்ட முடியும். நான் இல்லாமல் செய்த இந்த பட்டாபிஷேகம் செல்லாது. தற்போது உள்ள நிர்வாகக் குழு கலைக்கப்பட்டுவிட்டது. புதிய நிர்வாகக் குழு விரைவில் தேர்ந்தெடுக்கப்படும். மடத்தில் எனது அறையில் இருந்த 5 கிலோ வெள்ளி பொருள்களையும், ரூ.10 லட்சம் ரொக்கப் பணத்தையும் காணவில்லை. இதுகுறித்து நான் காவல்துறையிலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளேன் என்றார். இதற்கிடையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் புதிய மடாதிபதியாகப் பதவி ஏற்ற ஸ்ரீ பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமி, பசவ நிரஞ்சன்சுவாமி, பசவ பிரபு ஆகிய மூவரும் பழைய மடாதிபதியின் ஆதரவாளர்கள் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறி சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் நீலகண்ட தேசிகேந்திர மகா சுவாமிகளும் அதேபோல் மடாதிபதியாக பொறுப்பேற்று ஸ்ரீ பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகளும் தனித்தனியாகக் கொடுத்த புகாரின் அடிப்படையி்ல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து வீர சைவ மடத்தின் புதிதாகப் பொறுப்பேற்ற மடாதிபதியைத் தாக்கியதாக இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி மற்றும் நகரச் செயலாளர் பாலாஜி ஆகிய இருவரையும் கைது செய்தனர் போலீஸார். இந்தச் சம்பவம் ஆன்மிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க