ஹவாலா பணத்துடன் வந்ததா மர்ம கார்? - மேலப்பாளையத்தில் பரபரப்பு! | an unknown car seized with empty boxes in nellai

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (30/01/2019)

கடைசி தொடர்பு:20:40 (30/01/2019)

ஹவாலா பணத்துடன் வந்ததா மர்ம கார்? - மேலப்பாளையத்தில் பரபரப்பு!

நெல்லை மேலப்பாளையத்தில் மர்மமாக நின்ற கார் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இரண்டு பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்

காருக்குள். பெட்டிகள் கிடந்ததால், ஹவாலா பணப் பரிமாற்றத்துக்காக வரப்பட்டதா எனப் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். கடந்த சில தினங்களாகவே நெல்லையில் மாநகர காவல்துறையினர் மாநகர எல்லைக்குள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரைப் பிடிப்பதற்காகவும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கார்

இந்தநிலையில், நெல்லை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று ஒரு தொலைபேசித் தகவல் வந்துள்ளது. அதில் பேசிய நபர், `மேலப்பாளையம் ஆசாத்நகர் பகுதியில் ஹவாலா பணப் பரிமாற்றம் நடக்கிறது’ எனத் தெரிவித்துவிட்டு தொடர்பைத் துண்டித்துக் கொண்டார். இந்த ரகசியத் தகவல் கிடைத்ததும் மேலப்பாளையம் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். உடனடியாகப் போலீஸார் ஆசாத்நகர் சாலையில் சோதனை மேற்கொண்டார்கள். அந்த வழியாக வரக்கூடிய கார்கள் மற்றும் ஊருக்குள் இருந்து வெளியேறும் கார்களை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, அந்தப் பகுதியில் சாலையோரத்தில் ஒரு காரை நிறுத்தப்பட்டு இருப்பதைப் போலீஸார் கண்டுபிடித்தனர். சோதனையில் இருந்து தப்பும் வகையில் அந்தக் கார் நீண்ட நேரமாக அங்கேயே நின்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தக் காரில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சோந்த நரேந்திரசிங் என்பவரும் தூத்துக்குடி மாவட்டம் சங்கரப்பேரியைச் சேர்ந்த ரவி என்ற கார் ஓட்டுநரும் இருந்தனர், அவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் எதற்காகச் சோதனையில் இருந்து தப்பும் வகையில் காரை நிறுத்தி வைத்து இருந்தார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

காருக்குள் இருந்த காலிப் பெட்டிகள்

இந்தநிலையில், அதே பகுதியில் மேலும் ஒரு கார் மர்மமான முறையில், நிற்பதாகப் போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. கேரள மாநிலப் பதிவு எண் கொண்ட அந்தக் காரில் யாரும் இருக்கவில்லை. அதனால் காரைத் திறந்து போலீஸார் சோதனையிட்டனர். காருக்குள் சூட்கேஸ் இருந்ததால் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மேப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர், காரை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று சோதனை செய்ததில் காருக்குள் பெட்டிகள் இருந்தன. ஆனால், பெட்டிக்குள் எதுவும் இருக்கவில்லை. இதுதொடர்பாக மேலப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து இரண்டு கார்களும் இங்கு வந்ததன் காரணம் என்ன என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள். காரின் உரிமையாளர்கள் யார், ஹவாலா பணப்பரிமாற்றத்துக்காக இரு கார்களும் வந்தனவா அல்லது கள்ள நோட்டுகள் மாற்றுவதற்காக வந்தார்களா என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தால் மேலப்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.