'பள்ளிகளுக்குச் சிறுபான்மை அந்தஸ்து குறித்த அரசாணை ரத்து!' - உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு | HC quashes governtment order on minority instituttions student admissions

வெளியிடப்பட்ட நேரம்: 11:54 (31/01/2019)

கடைசி தொடர்பு:11:54 (31/01/2019)

'பள்ளிகளுக்குச் சிறுபான்மை அந்தஸ்து குறித்த அரசாணை ரத்து!' - உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

தமிழக அரசின் அரசாணை சிறுபான்மைப் பள்ளிகள் உரிமையைத் தடுக்கும் வகையில் உள்ளது என்று எதிர்ப்பு தெரிவித்து 140 சிறுபான்மையினக் கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடுத்தது.

'பள்ளிகளுக்குச் சிறுபான்மை அந்தஸ்து குறித்த அரசாணை ரத்து!' - உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

மிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை, கடந்த ஆண்டில், `அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 50 சதவிகித சிறுபான்மையினர் மாணவர்களைச் சேர்க்கும் பள்ளிகளுக்கே சிறுபான்மையினர் அந்தஸ்து' என்று அரசாணை ஒன்றைப் பிறப்பித்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம் அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

அரசாணை

தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளாக உள்ளன. இவற்றின் மாணவர் சேர்க்கை குறித்துத் தெளிவான வரையறைகள் இல்லாதிருப்பதால் நிர்வாகத்தில் ஏற்படும் குழப்பங்களைக் களைவதற்காக, 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் புதிய அரசாணை ஒன்றைப் பிறப்பித்தார்.

இந்த அரசாணையின்படி, `50 சதவிகித சிறுபான்மையினர் மாணவர்களைச் சேர்க்கும் பள்ளிகளுக்குத்தான், சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆணைப்படி,`ஏற்கெனவே சிறுபான்மையினர் அந்தஸ்து பெற்ற பள்ளிகளிலும், அந்த அந்தஸ்து ரத்து செய்யப்படாமல் இருக்க, ஒவ்வொரு கல்வியாண்டிலும் 50 சதவிகித சிறுபான்மையின மாணவர்களும் 25 சதவிகிதம் சிறுபான்மையினர் அல்லாதவர்களும் சேர்க்கப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மாணவர் எண்ணிக்கை குறையும்பட்சத்தில், சிறுபான்மை அந்தஸ்தை ரத்துசெய்யும்படி, தேசியச் சிறுபான்மையினர் ஆணையத்திடம் அதிகாரிகள் பரிந்துரை செய்ய முடியும்' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது. அரசாணை மேலும் 50 சதவிகிதத்திற்கும் குறைவாகச் சிறுபான்மை மாணவர் விண்ணப்பிக்கும் பட்சத்தில், எந்தவிதத் தகுதித் தேர்வும் இன்றி, அவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், இதில் அவர்களின் பொருளாதார நிலை, பெற்றோரின் கல்வித் தகுதி, பள்ளியிலிருந்து அவர்கள் தங்கியிருக்கும் தொலைவு ஆகியவற்றை நிபந்தனைகளாக வைக்கக் கூடாது எனவும் இந்த அரசாணையில் சொல்லப்பட்டது. அதுமட்டுமன்றி, மாணவர் சேர்க்கை குறித்த அறிக்கையையும் கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த அரசாணை கூறியது.

தமிழக அரசின் இந்த அரசாணை சிறுபான்மைப் பள்ளிகள் தொடங்குவதற்கும், நிர்வகிப்பதற்கும் வழங்கப்பட்ட உரிமையைத் தடுக்கும் வகையில் உள்ளது என்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் `மிஷனரீஸ் ஆப் பிரான்சிஸ் டி சேல்ஸ்' உட்பட 140 சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் வழக்குத் தொடுத்திருந்தன. இந்தநிலையில் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடைவிதித்து வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை நடந்து முடிந்தது. ``1992-ம் ஆண்டு தேசியச் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் ஆணையச் சட்டத்தின்படி, மாநில அரசுக்குச் சிறுபான்மை அந்தஸ்து தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை" என்று தெரிவித்த நீதிபதி ராஜா, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் தகுதியான சிறுபான்மை மாணவர்களை அனுமதிக்காத பள்ளிகளுக்கு எதிராகத் தேசியச் சிறுபான்மையினர் நல  ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.அரசாணை

இந்தத் தீர்ப்பு பற்றிப் பேசிய மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவஹருல்லா, ``சிறுபான்மையின மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் உருவாக்கப்பட்ட, சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் மட்டுமே ஒரு நிறுவனத்திற்குச் சிறுபான்மை அந்தஸ்து வழங்க உரிமை பெற்றது. அதுமட்டுமன்றி, இந்த ஆணையத்தால் ஒருமுறை சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட்டால் போதுமானது. அந்த அந்தஸ்தைப் புதுப்பிக்கத் தேவையில்லை. சிறுபான்மையினர் நிறுவனங்களை நடத்த உரிமை வழங்குவதற்காகத்தான் இந்த அந்தஸ்தே தவிர, சிறுபான்மையின மாணவர் சேர்க்கை நடைமுறைகளைச் சேர்ப்பதற்கானது அல்ல. அந்தச் சேர்க்கையை இதனோடு சேர்ப்பது சாத்தியமற்றது. ஏனெனில், ஒரு பகுதியில் உள்ள சிறுபான்மையின மாணவர்களின் எண்ணிக்கை, இந்தச் சேர்க்கை எண்ணிக்கைக்குக் குறைவாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. தேசியச் சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினர் அந்தஸ்து கொடுத்து பல்வேறு நிலைகளில் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவதைத் தடுக்க வழங்கப்பட்ட இந்தச் சிறப்புச் சலுகைகளை, தமிழக அரசு முற்றிலுமாகப் புறக்கணித்து, அரசாணை கொண்டுவந்தது, சிறுபான்மையின மக்களின் முன்னேற்றத்திற்கும், உரிமைக்கும் எதிரானது. அந்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது பாராட்டுதலுக்குரியது". என்றார்.


டிரெண்டிங் @ விகடன்