`ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உணவுகள் வீணாகின்றன!’ - மத்திய அரசு அதிகாரி வேதனை | In india One lakh crore rupees worth wasted in a year, informs central government official

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (30/01/2019)

கடைசி தொடர்பு:23:00 (30/01/2019)

`ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உணவுகள் வீணாகின்றன!’ - மத்திய அரசு அதிகாரி வேதனை

தஞ்சாவூரில் நடந்த விழா ஒன்றில் இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி மதிப்பிலான உணவு தானியங்கள் வீணாவதாக மத்திய உணவு பதனிடும் தொழில் அமைச்சக இணைச் செயலாளர் மின்ஹாஜ் ஆலம் தெரிவித்தார்.

சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதனிடும் தொழில் நிறுவனத்தின் 50 வது ஆண்டு பொன்விழா மற்றும் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த விழாவில் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் அனந்தராமகிருஷ்ணன் வரவேற்றார். 50வது ஆண்டையொட்டி சிறப்பு அஞ்சல் உறையைத் திருச்சி மத்திய மண்டல அஞ்லக இயக்குநர் தாமஸ் லூர்துராஜ் வெளியிட, அதை மத்திய உணவு பதனிடும் தொழில் அமைச்சக இணைச் செயலாளர் மின்ஹாஜ் ஆலம் பெற்றுக்கொண்டார்.

மயில்சாமி அண்ணாதுரை

இந்த விழாவில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கழகத்தின் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், ``விவசாயிகள் உற்பத்திசெய்யும் உணவுப் பொருள் மேஜைக்கே வரும் வகையில் இந்நிறுவனம் திட்டமிடல் வேண்டும். விவசாயிகள் உற்பத்தியாளர்களாக மட்டும் இருக்காமல் விற்பனையாளர்களாகவும் மாற வேண்டும். மாறி வரும் உணவு பழக்கவழக்கத்தை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். எந்த ஒரு முயற்சியாக இருந்தாலும் பலம், பலவீனம் இரண்டையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்படி நாங்கள் பார்த்ததால்தான் விண்வெளித் துறையில் சாதிக்க முடிகிறது. விளையாட்டுத் துறையில் பயிற்சி தேவைப்படுவதைப்போல அறிவியலுக்கும் செய்முறை பயிற்சி அவசியம். அறிவியல் மன்றம் மூலமாக மாணவர்களின் திறனை கண்டறிந்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

மின்ஹாஜ் ஆலம்

இந்திய உணவு பதனிடும் தொழில் அமைச்சக இணைச் செயலாளர் மின்ஹாஜ் ஆலம் பேசியதாவது, ``இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உணவு தானியங்கள் வீணாகிறது  இதைத் தடுக்க வேண்டும். உணவுப் பதனிட அதிக முதலீடு தேவைப்படுகிறது. அதைக் குறைக்கும் வகையில் சூழ்நிலைகளை உருவாக்கப்படும். இந்தியாவில் உள்ள சேமிப்புக் கிடங்கில் உள்ள உணவு தானியங்களில் 10 சதவிகிதம் வீணாகிறது. இதைத் தடுக்க இதுபோன்ற நிறுவனங்கள் முயற்சியை எடுக்க வேண்டும்’’ என்றார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க