‘கொட்டிய பூ மழை; கரகரத்த கலைஞர் குரல்’ - சிலை திறப்பு விழாவில் கலங்கிய ஸ்டாலின்! | dmk leader mk.stalin emotional moment at kalaignar statue opeaning event

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/01/2019)

கடைசி தொடர்பு:08:51 (31/01/2019)

‘கொட்டிய பூ மழை; கரகரத்த கலைஞர் குரல்’ - சிலை திறப்பு விழாவில் கலங்கிய ஸ்டாலின்!

மறைந்த தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை, அவரது குருகுலமான ஈரோட்டில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

ஸ்டாலின்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து, கடந்த டிசம்பர் 16-ம் தேதி, அவருடைய முழு உருவச் சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டது. அதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கலைஞரின் சிலையை அமைக்க தி.மு.க-வினர் மும்மராக வேலைசெய்துவந்தனர். ‘அறிவாலயத்திற்கு அடுத்து, தலைவர் கலைஞரின் குருகுலமான ஈரோட்டில்தான் அவருடைய சிலையைத் திறக்க வேண்டும்’ என முடிவெடுத்த ஸ்டாலின், அதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டிருந்தார். அந்த வகையில், ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் உள்ள கட்சிக்குச் சொந்தமான இடத்தில், கலைஞரின் சிலையை அமைக்கும் வேலையில் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துசாமி இறங்கினார். உடன்பிறப்புகளிடம் கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேல் வசூலாக, எட்டரை அடி உயரம் மற்றும் 750 கிலோ எடையில் கலைஞரின் முழு உருவ வெண்கலச் சிலை பிரமாண்டமாகத் தயாரானது.

ஸ்டாலின்

கலைஞரின் சிலையை ஸ்டாலின் திறந்துவைக்க இருக்கிறார் என்றதும், ஏற்பாடுகள் இன்னும் பலமாகின. அந்த வகையில், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற கலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில், தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர். சேலத்தில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு ஈரோட்டிற்கு வந்த ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையைத் திறந்துவைத்தார்.

சிலை

சிறிய அறை ஒன்றின் மேல் எட்டரை அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டிருந்த கலைஞரின் சிலை, பளபளப்பான மஞ்சள் நிறத் துணியால் மூடப்பட்டிருந்தது. மொபைல் போன் மூலம் பட்டனை அழுத்தி சிலையை ஸ்டாலின் திறந்துவைக்க, சிலைக்கு மேலே செட் செய்யப்பட்டிருந்த பைப் வழியாக ரோஜா இதழ்கள் மழைபோல் பொழிந்தன. மஞ்சள் நிற விளக்குகளால் மின்னிய கலைஞரின் வெண்கலச் சிலையைப் பார்த்து தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். சிலை திறக்கப்பட்டதும், கலைஞர் பேசிய ஆடியோ ஒன்று ஒலிபரப்பப்பட்டது. அதில், ‘எனக்குப் பிறகு தி.மு.க-வை வழிநடத்தும் திறமை தளபதி மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது. ஸ்டாலினின் உழைப்பே அதற்கு சாட்சி’ என்று ஸ்டாலினைப் பற்றி கலைஞர் உருக்கமாக வாழ்த்துவதாய் அந்த ஆடியோ இருந்தது. ஏற்கெனவே, கலைஞரின் சிலையைத் திறந்து வைத்து ஒருவித உணர்வில் ஆட்பட்டிருந்த ஸ்டாலின், கலைஞரின் குரலைக் கேட்டு ஒருகட்டத்தில் கலங்கிப்போனார்.

கலைஞரின் சிலையைத் திறந்துவைத்துப் பேசிய ஸ்டாலின், “கலைஞர் என்ற ஒரு மாபெரும் தலைவரை நீங்கள் இழந்திருக்கிறீர்கள். ஆனால், நான் அந்தத் தலைவர் மட்டுமல்ல, என் தந்தையையும் சேர்த்து இழந்திருக்கிறேன். என்னைப் பெற்றெடுத்தது மட்டுமல்ல, தலைவராக என்னை உயிர்ப்பித்து, அவரது சிலையைத் திறக்கும் தகுதியை எனக்கு வழங்கியதும் அவரேதான். தலைவர் கலைஞரின் சிலையைத் திறந்த அந்தக் கணத்தில் என் எண்ணம், சிந்தனையெல்லாம் எங்கோ சென்றது. ஒருவித உணர்ச்சிமயமான நிலைக்கு நான் சென்றேன்” எனத் தழுதழுத்துப் பேசினார்.