`அவனால் எந்த சேதமும் இருக்காது!' - மீண்டும் ஊருக்குள் வந்த சின்னத்தம்பி யானை | Chinnathambi elephant reached angalakurichi village

வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (31/01/2019)

கடைசி தொடர்பு:11:29 (31/01/2019)

`அவனால் எந்த சேதமும் இருக்காது!' - மீண்டும் ஊருக்குள் வந்த சின்னத்தம்பி யானை

கோவையில் இருந்து டாப்ஸ்லிப் பகுதிக்கு காடு கடத்தப்பட்ட சின்னத்தம்பி யானை, அங்கலக்குறிச்சி கிராமத்துக்கு வந்துள்ளான்.

சின்னத்தம்பி

கோவை தடாகம், பெரிய தடாகம், சின்னத் தடாகம், ஆனைகட்டி பகுதிகளில் சுற்றிவந்த விநாயகன் மற்றும் சின்னத்தம்பி யானைகளை வேறு பகுதிக்கு  இடமாற்றம் செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்குப் பழங்குடி மக்களும், பொது மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி, கடந்த மாதம் விநாயகன் மற்றும் கடந்த வெள்ளிக்கிழமை சின்னத்தம்பி ஆகிய யானைகள் பிடிக்கப்பட்டன. விநாயகன் யானையை முதுமலைப் பகுதியில் விட்ட நிலையில், சின்னத்தம்பி யானையை டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதியில் விட்டனர்.

குறிப்பாக, குடும்பத்தை விட்டுப் பிரிந்து, தந்தம் உடைந்து, ரத்தக் காயங்களுடன் இடமாற்றம் செய்யப்பட்டதால், சின்னத்தம்பி யானையை மீண்டும் தடாகம் பகுதியிலேயே விட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், பொள்ளாச்சியை அடுத்த, அங்கலக்குறிச்சி என்ற கிராமத்துக்குள் சின்னத்தம்பி இன்று நுழைந்தான். இதைத் தொடர்ந்து, பட்டாசுகள் வீசி, சின்னத்தம்பியை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஆனைகட்டிப் பகுதி மக்கள், “சின்னத்தம்பி ஊருக்குள் வந்தது மகிழ்ச்சிதான். அவனால், எந்தச் சேதமும் நடக்காது. ஆனால், அது அந்தப் பகுதி மக்களுக்குத் தெரியாது. எனவே, அவர்கள் பயப்பட வாய்ப்புள்ளது. இது, சின்னத்தம்பிக்கும் ஒரு விதத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைதான்.  இதற்கு இடமாற்றம் தீர்வில்லை. சின்னத்தம்பியை மீண்டும் தடாகம் பகுதிக்கே இடமாற்றம் செய்து, வனப்பகுதியில் விட்டு, நிரந்தர தீர்வுக்கு வனத்துறை வழிவகைசெய்ய வேண்டும்” என்று கூறுகின்றனர்.