கடலில் விடப்பட்ட 9 லட்சம் இறால் மீன் குஞ்சுகள்! - மீனவர்கள் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை | To protect the livelihood of fishermen, 9 million prawns dropped at sea in Rameswaram

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (31/01/2019)

கடைசி தொடர்பு:12:05 (31/01/2019)

கடலில் விடப்பட்ட 9 லட்சம் இறால் மீன் குஞ்சுகள்! - மீனவர்கள் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை

மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவனத்தினரால் 9 லட்சம் இறால் மீன் குஞ்சுகள் ராமேஸ்வரம் கடலில் விடப்பட்டன.

ராமேஸ்வரம் கடலில் விடப்பட்ட இறால் மீன் குஞ்சுகள்
 

மத்திய மீன் ஆராய்ச்சி நிறுவனம், மண்டபம் அருகே உள்ள மரைக்காயர்பட்டினத்தில் செயல்பட்டுவருகிறது. இங்கு, பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் உயிரினங்கள் குறித்தும், அவற்றின் வாழ்வியல் சூழல் மற்றும் கடலில் அவ்வப்போது ஏற்படும் மாசு குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மேலும், பல்வேறு மீன் இனங்களின் குஞ்சுகள் பொரிப்பகமும் இங்கு இயங்கிவருகிறது. இங்கு உருவாக்கப்படும் புதிய ரக மீன்கள் மற்றும் இறால் மீன் குஞ்சுகளை அவ்வப்போது கடல் பகுதியில் விடுவதன் மூலம், இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிவருகின்றனர். தாய் இறால் மீனின் மூலம் பொரிப்பகங்களில் உருவாகும் குஞ்சுகளை 45 நாள்கள் பாதுகாப்புடன் வளர்த்து, அவற்றைக் கடல் பகுதிகளில் விடும் பணியில் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிறுவனத்தினர் ஈடுபட்டுவருகின்றனர். இதன்படி, கடந்த டிசம்பர் மாதம் பாம்பன் கடல் பகுதியில் 5 லட்சம் இறால் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இன்று, இரண்டாம் கட்டமாக ராமேஸ்வரம் ஓலைக்குடா கடல் பகுதியில் 9 லட்சம் இறால்மீன் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

இதுகுறித்து, மண்டபம் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பு ஆராய்ச்சியாளர் ஜெயக்குமார் கூறுகையில், ``மீன்வளம் குறைவாகிவரும் பகுதிகளில் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் இறால் மீன் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுவருகின்றன. கடந்த ஆண்டில் 17 லட்சம் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, 30 லட்சம் இறால் மீன் குஞ்சுகளை விட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கடலில் விடப்படும் இறால்மீன் குஞ்சுகள், 5 மாதங்களில் உரிய வளர்ச்சியைப் பெறும். இன்று ஃப்ளவர் இறால் வகையைச் சேர்ந்த 9 லட்சம் இறால்மீன் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன'' என்றார்.

இதில், மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் சங்கர், ஜான்சன், நிர்வாகக் குழு உறுப்பினர் முரளிதரன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.