`என் மகளுக்கு ஏன் டார்ச்சர் கொடுக்கிறாய்!' - தட்டிக்கேட்ட தந்தையை அடித்துக் கொன்ற வாலிபர் | old man killed near by pudukottai

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (31/01/2019)

கடைசி தொடர்பு:13:00 (31/01/2019)

`என் மகளுக்கு ஏன் டார்ச்சர் கொடுக்கிறாய்!' - தட்டிக்கேட்ட தந்தையை அடித்துக் கொன்ற வாலிபர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள  ரத்தினக்கோட்டையில், பெண்ணை வழிமறித்து டார்ச்சர் கொடுத்துவந்த வாலிபரைத் தட்டிக்கேட்ட அந்தப் பெண்ணின் தந்தையை வாலிபர் அடித்துக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட தந்தையின் சடலத்தை பார்த்து கதறி அழும் மகள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ரத்தினக்கோட்டையைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (52).இவரது மகள் சரண்யா (19) அறந்தாங்கியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலைபார்த்துவந்தார். வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த சரண்யாவை, அதே ஊரைச் சேர்ந்த செல்வம் (25)என்பவர்  அந்தப் பகுதியில் உள்ள தைலமரக்காடு அருகே வழிமறித்துப் பேசியுள்ளார். திருமணம் செய்துகொள்ளும் படி டார்ச்சர்  கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மகாலிங்கம், தைலமரக்காட்டுக்குச் சென்று, 'என் மகளை வழிமறித்து ஏன் டார்ச்சர் கொடுக்கிறாய்' என்று கண்டிப்புடன் தட்டிக்கேட்டுள்ளார். இதுகுறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த செல்வம், மகாலிங்கத்தை அடித்தார். அப்போது, மகாலிங்கத்தின் நெஞ்சுப்பகுதியில் ஓங்கிக் குத்தினார். இதனால், நிலைகுலைந்த மகாலிங்கம் கீழே விழுந்தார். பேச்சு, மூச்சின்றிக் கிடந்ததால், பயந்துபோன செல்வம், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

சரண்யாவின் வீடு

அந்தப் பகுதி வழியாக வந்த பொதுமக்கள் அவரை மீட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதனால், கடுமையாக வேதனை அடைந்த சரண்யா, தந்தையின் அருகில் அமர்ந்து, தந்தை மீண்டும் உயிர்பிழைக்க வேண்டும் என்று கதறியதைப் பார்த்த அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவைத்தது. உறவினர்கள் அனைவரும் சரண்யாவுக்கு ஆறுதல் கூறித் தேற்றினர். இந்தச் சம்பவம்குறித்து அறந்தாங்கி போலீஸார் வழக்குப்பதிந்து  செல்வத்தைத் தேடிவருகின்றனர்.