`ஊராட்சி சபைக் கூட்டத்தை உதயநிதி நடத்தலாமா?!' - அறிவாலய முடிவால் கேள்வி எழுப்பும் சீனியர்கள் | udhayanithi stalin to participates grama saba meeting

வெளியிடப்பட்ட நேரம்: 14:11 (31/01/2019)

கடைசி தொடர்பு:19:37 (31/01/2019)

`ஊராட்சி சபைக் கூட்டத்தை உதயநிதி நடத்தலாமா?!' - அறிவாலய முடிவால் கேள்வி எழுப்பும் சீனியர்கள்

கிராம சபைக் கூட்டங்களால் கட்சித் தொண்டர்கள் உற்சாகத்துடன் வேலை பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக உதயநிதியை அனுப்ப முடிவெடுத்திருக்கிறது தலைமை.

`ஊராட்சி சபைக் கூட்டத்தை உதயநிதி நடத்தலாமா?!' - அறிவாலய முடிவால் கேள்வி எழுப்பும் சீனியர்கள்

ஸ்டாலின், கனிமொழியைத் தொடர்ந்து ஊராட்சி சபைக் கூட்டத்தை நாளை முதல் நடத்த இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். ` ஆண்டிபட்டியிலிருந்து சபைக் கூட்டத்தை நடத்த இருக்கிறார். ஸ்டாலின், கனிமொழிக்குக் கிடைத்த வரவேற்புதான் இதற்கான அடிப்படைக் காரணம்' என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள். 

கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி, `மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்’ என்ற முழக்கத்துடன் ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்தி வருகிறது தி.மு.க. திருவாரூரில் கடந்த 9-ம் தேதி தொடங்கி வைத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டு வருகிறார். அதேபோல், தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்டங்களில் ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்தினார் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி. கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதியிலிருந்து தொடர்ந்து பத்து நாள்கள் சபைக் கூட்டத்தை நடத்தினார். தி.மு.க-வின் இந்த முயற்சியால் ஊராட்சிகள்தோறும் மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்தநிலையில், நாளை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ஊராட்சி சபைக் கூட்டத்தைத் தொடங்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். 

உதயநிதி ஸ்டாலின்

மதுரை, தேனி உட்பட தென்மாவட்டங்களில் இந்தக் கூட்டத்தை நடத்த இருக்கிறார் உதயநிதி. இதன் தொடர்ச்சியாக வரும் பிப்ரவரி 5-ம் தேதி தூத்துக்குடி வடக்கு, தெற்குத் தொகுதிகளில் தலா ஓர் ஊராட்சி சபைக் கூட்டத்தை அவர் நடத்த இருக்கிறார். இந்தத் தகவலை கனிமொழியிடம் தெரிவித்திருக்கிறார் தி.மு.க இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அன்பில் பொய்யாமொழி மகேஷ். இதுதொடர்பாக அவர் பேசும்போது, `கிராம சபைக் கூட்டத்தை நடத்த இருக்கிறார் உதயநிதி. நீங்களும் கலந்து கொள்கிறீர்களா?' எனக் கேட்டிருக்கிறார். இதற்குப் பதில் கொடுத்த கனிமொழி, `நான் பங்கேற்பது கடினம். அவர் நல்லபடியாக நடத்தட்டும்' எனக் கூறியிருக்கிறார். அனிதா ராதாகிருஷ்ணனும் இந்தத் தகவலைக் கனிமொழியின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். 

கனிமொழி

உதயநிதியின் பயணத் திட்டம் குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், ``இன்று மதுரைக்குச் செல்ல இருக்கிறார் உதயநிதி. நாளை ஆண்டிப்பட்டியில் கூட்டத்தை நடத்த இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கிராம சபைக் கூட்டங்களால் கட்சித் தொண்டர்கள் உற்சாகத்துடன் வேலை பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதன் அடுத்தகட்டமாக உதயநிதியை அனுப்ப முடிவெடுத்திருக்கிறது தலைமை. இதில் அடிப்படையாகச் சில கேள்விகள் எழுகின்றன. தி.மு.க தலைவராகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் ஸ்டாலின் இருக்கிறார். அவர் இந்தக் கூட்டத்தை நடத்துவதில் அர்த்தம் இருக்கிறது. வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராகப் போட்டியிட இருக்கிறார் கனிமொழி. அதை மனதில் வைத்து கிராம சபைக் கூட்டங்களை அவர் தூத்துக்குடியில் நடத்தினார். 

கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலின்

தற்போது மாநிலங்களவை தி.மு.க குழுவின் தலைவராகவும் எம்.பி-யாகவும் கனிமொழி இருக்கிறார். அவர் ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்துவதிலும் அர்த்தம் இருக்கிறது. மக்களின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆனால், முரசொலி நாளேட்டின் நிர்வாக அறங்காவலர் என்ற பதவியைத் தாண்டி தி.மு.க-வில் எந்தப் பொறுப்பிலும் உதயநிதி இல்லை. மக்களின் குறைகளைக் கேட்க இருக்கும் உதயநிதி, அந்தக் குறைகளிடம் யாரிடம் போய்க் கொடுப்பார். அரசியல்ரீதியாக இந்தக் கேள்வி எழுப்பப்பட்டால் பதில் சொல்வது கடினம். இதை எப்படி எடுத்துக்கொள்வது என சீனியர்களுக்கும் தெரியவில்லை" என்றார் ஆதங்கத்துடன். 

உதயநிதி ஸ்டாலின்

ஆனால், உதயநிதியின் பயணம் குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க இளைஞரணி நிர்வாகி ஒருவர், ``கஜாவால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு களத்தில் நின்று ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் உதயநிதி. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, உதயநிதிக்காக சீட் கேட்டு ரசிகர் மன்றத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர் பணம் செலுத்தினர். இப்போது கிராம சபைக் கூட்டம் மூலமாக தமிழ்நாடு முழுக்க வலம் வர இருக்கிறார். முரசொலி நாளேட்டின் நிர்வாக இயக்குநராக இருப்பதால், மக்களின் கோரிக்கைகளை தலைமையின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமையும். மக்களின் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்த்துக் கொள்வதற்கும் உதவியாக இருக்கும். இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அந்தக் கூட்டத்துக்கு அவர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறார்" என்றார் நிதானமாக. 

` ஊராட்சி சபைக் கூட்டத்தின் மூலமாக உதயநிதிக்கு அரசியல் என்ட்ரிக்கு வடிவம் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்' எனப் பேசத் தொடங்கியுள்ளனர் அறிவாலய நிர்வாகிகள்.