தலைமை மீது அதிருப்தி - தி.மு.க-வுக்குத் தாவும் ரஜினி மக்கள் மன்றச் செயலாளர்? | Rajni makkal mandram Secretary will join to dmk

வெளியிடப்பட்ட நேரம்: 14:41 (31/01/2019)

கடைசி தொடர்பு:14:42 (31/01/2019)

தலைமை மீது அதிருப்தி - தி.மு.க-வுக்குத் தாவும் ரஜினி மக்கள் மன்றச் செயலாளர்?

ரஜினி குடும்பத்தினரின் பூர்வீகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாச்சிக்குப்பம் கிராமம். இந்த கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளராக இருப்பவர் மதியழகன். ரஜினி அண்ணன் சத்தியநாராயணாவின் சிபாரிசில் மதியழகன் மாவட்டச் செயலாளராக ஆனார் என்று சொல்லப்படுகிறது. மதியழகன் தொழில் அதிபராக இருக்கிறார். குறுகிய காலத்தில் அரசியலில் பிரபலமாக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் உள்ளவர். மன்றத்தை வளர்ப்பதில் தீவிர ஆர்வம் செலுத்திவந்திருக்கிறார். இதற்காக, நிறைய செலவும் செய்திருக்கிறார். ஆனால், ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள யாரும் தன்னை மதிப்பதில்லை என்று புலம்பி வந்திருக்கிறார். 

ரஜினி

மக்கள் மன்றத்தினர் கிருஷ்ணகிரிக்கு வந்தால், மதியழகனை அழைக்காமல் இங்கிருக்கும் இன்னொரு நபரை அழைத்துப் பேசுவார்களாம். இதனால், நொந்துபோய் இருந்திருக்கிறார் மதியழகன். ரஜினி கட்சி ஆரம்பிப்பதில் வீண் காலதாமதம் செய்கிறார். தலைமை மன்றத்தின் முக்கிய பிரமுகர்களும் மதிப்பதில்லை என்கிற காரணத்தால், அவர் அடுத்தகட்ட அரசியல் முடிவை எடுத்திருக்கிறார். தற்போது அவர் சென்னைக்கு வந்து மு.க.ஸ்டாலின் தரப்பினரைச் சந்தித்துவிட்டுப்போயிருக்கிறார். பொறுத்திருங்கள் என்று தி.மு.க தரப்பில் பதில் சொல்லப்பட்டதாம். இந்த விஷயம் ரஜினிக்குச் சொல்லப்பட்டதில், ``அவர் இஷ்டம்" என்று சொல்லிவிட்டாராம். இதனால், மதியழகன் தி.மு.கவில் சேருவது ஏறக்குறைய உறுதி ஆகிவிட்டது. 

ரஜினி

இதுபற்றி மதியழகனிடம் பேசினோம், ``தலைமையில் இருப்பவர்கள் மதிப்பதில்லை. மனச்சோர்வுடன் இருக்கிறேன்" என்று மட்டும் சொன்னார். மதியழகனைப் போலவே, வடசென்னையிலும் ஏகப்பட்ட பூசல். ரஜினி மன்றத்தில் நீண்டகாலமாக இருந்த ஒருவரின் மகன் மதன். சுமார் இரண்டாயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்களைச் சேர்த்தவர். இவரின் ஆர்வம், வடசென்னை ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளராக இருப்பவருக்குப் பிடிக்கவில்லையாம். மதனை எதிர்கோஷ்டியாக நினைத்திருக்கிறார். விளைவு... அண்மையில் அ.தி.மு.க.வுக்குத் தாவிவிட்டார் மதன். அவருடன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சென்றுவிட்டனர். துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் ஏராளமானவரை அ.தி.மு.க-வில் ஐக்கியமாக வைத்திருக்கிறார் மதன். ரஜினி மக்கள் மன்றத்துக்குத் தேவை ஆபரேஷன். அதை ரஜினி உடனடியாகச் செய்வாரா? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க