`ஆக்கிரமிப்பு இருந்தால் காலி செய்ய உத்தரவிடுங்கள்!’ - தகிக்கும் தளவாய் சுந்தரம் | Thalavai sundaram speaks about encroachments

வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (31/01/2019)

கடைசி தொடர்பு:17:18 (31/01/2019)

`ஆக்கிரமிப்பு இருந்தால் காலி செய்ய உத்தரவிடுங்கள்!’ - தகிக்கும் தளவாய் சுந்தரம்

நீதிபதிகளுக்கும் ஒரு வரம்பு இருக்கிறது. அந்த வரம்புக்குள் அவர்கள் செயல்பட வேண்டும். எதை எடுத்தாலும் அரசியல்வாதிகள்மீது குற்றம் சாட்டவும், காலையில் ஒரு தீர்ப்பு, மாலையில் ஒரு தீர்ப்பு என்ற நிலை தமிழ்நாட்டில் நீடித்துக்கொண்டிருக்கிறது' என தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் கூறினார்.

தளவாய் சுந்தரம்

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில், தமிழக அரசின் இலவச கோழி வழங்கும் திட்டத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் தொடங்கிவைத்தார். பின்னர் தளவாய் சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``தமிழ்நாட்டில் உள்ள நீதிபதிகள் தங்கள் நிலையை மாற்றி, ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு  ஓட்டுரிமை இல்லை என்று கூறுகிறார்கள். நீதிபதிகளுக்கும் ஒரு வரம்பு இருக்கிறது, அந்த வரம்புக்குள் அவர்கள் செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். ஆக்கிரமிப்பு இருந்தால், அதை காலி செய்வதற்கு உத்தரவிடலாம். காலி செய்யாவிட்டால், காவல்துறை பாதுகாப்புடன் காலி செய்யலாம். வாக்குரிமையே கிடையாது எனக் கூறுவதற்கு இவர்களுக்கு அதிகாரம் கிடையாது.

தளவாய் சுந்தரம்

எதை எடுத்தாலும் நீதிமன்றத்தின் தலையீடு தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது. கொலீஜியம் முறையில் தங்களின் சீனியர்களைப் பிடித்து பதவிக்கு வருகிறார்கள். எதை எடுத்தாலும் அரசியல்வாதிகள்மீது குற்றம் சாட்டவும், காலையில் ஒரு தீர்ப்பு, மாலையில் ஒரு தீர்ப்பு என்ற நிலை தமிழ்நாட்டில் நீடித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு, பொதுமக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள்" என்றார். நீதிமன்றத்தை விமர்சித்த தளவாய் சுந்தரத்தின் இந்தப் பேச்சு, இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.