`கேழ்வரகு, கம்பைக் காணோம்; பீட்சா, பர்கர் வந்துவிட்டது!’ - உருக்கமாக நடந்த பாரம்பர்ய உணவு விழா | Traditional food festival held in ariyalur

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (31/01/2019)

கடைசி தொடர்பு:15:50 (31/01/2019)

`கேழ்வரகு, கம்பைக் காணோம்; பீட்சா, பர்கர் வந்துவிட்டது!’ - உருக்கமாக நடந்த பாரம்பர்ய உணவு விழா

``நம்முன்னோர்கள் 100 வயது வரை நோய்நொடியில்லாமல் வாழ்ந்தார்கள். ஆனால், நம்மால் 60 வயதுகூட வாழ முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று யோசித்தீர்களா மக்களே’’ எனச் சித்த பாரம்பர்ய உணவு மற்றும் தானியம் பற்றிய விழிப்பு உணர்வு பேரணியில் பேசப்பட்டது.

                                                 பாரம்பர்ய உணவு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தற்கால ஆங்கில மருத்துவ முறையைத் தவிர்த்து பண்டைக்காலங்களில் பயன்படுத்தி வந்த மூலிகைகள், அவற்றின் பயன்பாடுகளைத் தற்கால சமுதாயம் அறிந்துகொள்ளும் பொருட்டு மாணவர்களுக்குச் சித்த மருத்துவ மூலிகைகள், பாரம்பர்ய பயறு வகைகள், உணவு வகைகளை முன்னோர்கள் எப்படிப் பயன்படுத்தி அதன்மூலம் அவர்களின் நீண்டகால ஆயுளை பற்றி எடுத்துக் கூறியும், அதை விளக்கும் வகையில் கருத்தரங்கமும் விழிப்புஉணர்வுப் பேரணியும் நடத்தினர்.

                                           

தனியார் கல்லூரி துணைத் தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். அரியலூர் மாவட்டச் சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தலைமை வகித்துச் சிறப்புரையாற்றினார். ``கல்லூரியில் பயிலும் மாணவர்களாகிய நீங்கள் பொதுமக்களிடத்தில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தப் பேரணியும் கண்காட்சி கருத்தரங்கம் நடைபெறுகிறது. தற்போது அதிக அளவில் நோய்கள் உருவாகி வருகின்றன. அதுபோல மருத்துவர்கள், மருத்துவமனைகள் அதிக அளவில் பெருகி வருகின்றன. இதற்குக் காரணம் பண்டைய காலத்தில் போல தற்போது பாரம்பர்ய உணவை யாரும் எடுத்துக்கொள்வதில்லை. நம்முடைய மூதாதையர்போல நம்மால் இருக்க முடியாததற்குக் காரணம் நாம் உண்ணும் உணவு முறைதான். முந்தைய காலத்தில் உணவு முறைகள் நெல், கம்பு, கேழ்வரகு, சாமை, சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான தானியங்களால் உணவு வகைகள் செய்யப்பட்டு உண்டு வந்தனர். ஆனால், இவையெல்லாம் மாறி தற்போது பீட்சா, பர்கர், பரோட்டா என மாறிவிட்டது.

உணவு வகைகளில் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது கீரை வகை, தானிய வகைகளை உட்கொண்டு வர வேண்டும். ஆனால், அதை யாருமே உண்பதில்லை. தற்போது கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள தானியங்கள், கீரைகள் ஒரு நாளைக்கு ஒரு கீரை, ஒரு தானியம் என உண்டாலே நமது உடல் ஆரோக்கியமுடன் வாழ முடியும்’’ என்று உருக்கமாகப் பேசினர்.

கருத்தரங்கத்தில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் செந்தில் நாதன், அரியலூர் மருத்துவர் ஞானரூபன், அன்னை தெரசா பள்ளி தாளாளர் முத்துக்குமார் ஆகியோர் சித்த மருத்துவத்தில் உள்ள பயன்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினர். விழாவை முன்னிட்டு கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தானிய வகைகள் காய்கறிகள் கீரை ஆகியவற்றை பொதுமக்கள், கல்லூரி மாணவ - மாணவிகள் கண்டு ரசித்தனர். விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.