`ஓரம்கட்டப்படும் சசிகலா; சின்னம்மா ஆகும் அனுராதா! - டி.டி.வி மீது அ.ம.மு.க மாநிலச் செயலாளர் பகீர் | ammk state Secretary akneeshwarn will join to divakaran party

வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (31/01/2019)

கடைசி தொடர்பு:20:13 (31/01/2019)

`ஓரம்கட்டப்படும் சசிகலா; சின்னம்மா ஆகும் அனுராதா! - டி.டி.வி மீது அ.ம.மு.க மாநிலச் செயலாளர் பகீர்

டி.டி.வி தினகரன் மீதான அதிருப்தியால் அவரது கட்சியைச் சேர்ந்த தலைமைக் கழகப் பேச்சாளர் கட்சி மாறத் திட்டமிட்டுள்ளார். 

தினகரன் - அனுராதா

அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மீது கட்சியினர் சிலர் அதிருப்தியில் இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இதனால்தான் சமீபத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அ.ம.மு.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்தார். அவரைப் போலவே அ.ம.மு.க தலைமைக் கழகப் பேச்சாளர் அக்னீஸ்வரும் டி.டி.வி மீதான அதிருப்தியால் கட்சி மாறப்போவதாகத் தகவல் வெளியானது.

இதுகுறித்து அ.ம.மு.க தலைமைக் கழகப் பேச்சாளர் அக்னீஸ்வரிடம் பேசினோம். ``கல்லூரியில் படித்து வந்த காலத்திலிருந்தே அ.தி.மு.க-வில் இருந்தேன். கட்சி பிரிந்த பின் கடந்த இரண்டு ஆண்டுகளாக அ.ம.மு.க-வின் அங்கீகரிக்கப்பட்ட தலைமைக் கழகப் பேச்சாளராகப் பணியாற்றி வருகிறேன். உயர் நீதிமன்ற அ.ம.மு.க வழக்கறிஞர் பிரிவிலும் இருக்கிறேன். 

சசிகலா

தமிழ்நாடு முழுக்க அ.ம.மு.க-வுக்காக, டி.டி.வி.தினகரனுக்காகப் பேசியிருக்கிறேன். எல்லா விவாத மேடைகளிலும் அவருக்காகப் பேசி வந்திருக்கிறேன். தினகரன் கட்சி ஆரம்பித்ததற்கு முன்பே நேர விரயம், பொருள் விரயம் செய்து அவருக்காக உழைத்தேன். ஆனால், அண்மைக்காலமாகத் தினகரனின் பேச்சு, செயல்பாடுகளில் தரம் குறைந்துவிட்டது. ஆரம்பக்காலத்தில் இருந்ததுபோல் தற்போது இல்லை. ஓட்டு வங்கிக்காகச் சாதிய அரசியலைச் செய்து வருகிறார். கருணாநிதி, ஜெயலலிதா செய்யாததைத் தினகரன் செய்ய முயன்று வருகிறார். அவரின் முயற்சியால் கலவர சூழல்தான் ஏற்படும். சாதிய மோதல்களை ஏற்படுத்தி அதன்மூலம் தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிடலாம் என எண்ணி வருகிறார். 

அக்னீஸ்வர்

அவரின் தரம் தாழ்ந்த அரசியல் பிடிக்காததால்தான் இந்தக் கட்சியிலிருந்து வெளியேறுகிறேன். அமைப்புச் செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரை எல்லோரிடமும் இவர்கள் பணத்தை எதிர்பார்க்கிறார்கள். சசிகலா தியாகம் பண்ணி, தற்போது சிறையில் இருக்கிறார். ஆனால், தற்போது இருப்பவர்கள் எல்லாம் தினகரனின் மனைவி அனுராதாவை சின்னம்மா எனக் கூப்பிடுகிறார்கள். மரியாதை செலுத்துகிறார்கள். சசிகலாவை ஓரம்கட்டும் நடவடிக்கையாகவே அனுராதாவை உள்ளே கொண்டுவர முயல்கிறார்கள். தன்னை ஜெயலலிதாவாகவே தினகரன் கற்பனை செய்துகொள்கிறார்.  

தினகரன் - அனுராதா

அம்மா இருக்கும்போது 132 ஆக இருந்த எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை தினகரன் உள்ளே நுழைந்த பிறகு, 18 ஆனது. இந்தப் பதினெட்டும் தற்போது ஒரு எம்.எல்.ஏ-வாக ஆகிவிட்டது. அம்மாவின் உழைப்பால் உருவான அந்தப் பதினெட்டு எம்.எல்.ஏ-க்களும் தற்போது தினகரனின் மாயவலையில் விழுந்துவிட்டதாகப் புலம்பி வருகின்றனர். அவர்கள் எல்லாம் மனஉளைச்சலில்தான் இருக்கிறார்கள். சசிகலா மீதான விசுவாசத்தால்தான் அவர்கள் இன்னும் அங்கே இருக்கிறார்கள். கட்சிக்காக உழைத்தவர்களை மதிப்பதில்லை. அவர்களை எல்லாம் ஓரம்கட்டப் பார்க்கிறார். தனக்கு நெருக்கமானவர்களை மட்டுமே கட்சியில் முன்னிறுத்துகிறார். இவரின் செயலால் அ.ம.மு.க-விலிருந்து விரைவில் வெளியேறுவார்கள்’’ என்று கூறும் அக்னீஸ்வரன், திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொள்ள உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க