கால்டாக்ஸி டிரைவர் தற்கொலை! - போலீஸ் கமிஷனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்  | human rights commission involved in taxi driver death case

வெளியிடப்பட்ட நேரம்: 18:18 (31/01/2019)

கடைசி தொடர்பு:18:18 (31/01/2019)

கால்டாக்ஸி டிரைவர் தற்கொலை! - போலீஸ் கமிஷனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 

கால்டாக்ஸி டிரைவர் ராஜேஸ்

கால்டாக்ஸி டிரைவர் ராஜேஷ் தற்கொலை விவகாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் விளக்கம்கேட்டு மாநில மனித உரிமை ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

`என் சாவுக்கு சென்னை போலீஸ்தான் காரணம்’ என்று கால்டாக்ஸி டிரைவர் ராஜேஷ் வீடியோ ஒன்றைப் பதிவு செய்தார். அதன் பிறகு, அவர் 25.1.2019-ல் தற்கொலை செய்துகொண்டார். சிங்கபெருமாள்கோயில் - மறைமலைநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தின் அருகில் கிடந்த ராஜேஷின் சடலத்தை தாம்பரம் ரயில்வே போலீஸார் கைப்பற்றினர். ராஜேஷின் செல்போனை அவரின் அண்ணன் கௌதம் ஆய்வு செய்தபோதுதான் தற்கொலைக்கு முன் ராஜேஷ் பேசிய வீடியோ சிக்கியது. அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இதுகுறித்த செய்தி `கார்ல லேடி இருந்தும் அசிங்கமா போலீஸ்காரர் பேசினாரு தற்கொலைக்கு முன் டிரைவர் வாக்குமூலம்’ என்ற தலைப்பில் விகடன் டாட் காமில் இன்று வெளியிட்டோம். இந்தச் செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணைய நீதிபதியும் உறுப்பினருமான துரை.ஜெயசந்திரன், தாமாக முன்வந்து (சுமோட்டோ) சென்னை பெருநகரப் போலீஸ் கமிஷனருக்கு இன்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ``விகடன் டாட்காமில் வெளியான செய்தி அடிப்படையாகக் கொண்டு சுமோட்டோவாக இந்த வழக்கை எடுக்கவுள்ளோம். 4 வாரங்களுக்குள் அறிக்கையை விளக்கமாக சமர்பிக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

  டிரைவர் தற்கொலை குறித்து போலீஸ் கமிஷனருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்

ஏற்கெனவே இந்த வீடியோ குறித்து விசாரிக்க, இணை கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தற்போது மாநில மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் கால்டாக்ஸி டிரைவர் ராஜேஷ் தற்கொலை விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் ராஜேஷின் அண்ணன் கௌதம் மற்றும் டாக்ஸி ஓட்டுநர் சங்கத் தலைவர் சபரிநாதன் ஆகியோர் திருமங்கலம் போக்குவரத்து போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.