நாடோடி இன மக்களுக்கு ஹெல்மெட்! - விழிப்பு உணர்வை ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர் | Cuddalore inspector gives helmet to Nomadic people

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (31/01/2019)

கடைசி தொடர்பு:20:10 (31/01/2019)

நாடோடி இன மக்களுக்கு ஹெல்மெட்! - விழிப்பு உணர்வை ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர்

நாடோடி இன மக்களுக்கு ஹெல்மெட் வழங்கி விழிப்பு உணர்வு ஏற்படுத்தியுள்ளார் வடலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்பேத்கார்.

நாடோடி இன பெண்ணுக்கு ஹெல்மெட் வழங்கிய இன்ஸ்பெக்டர்

கடலூர் மாவட்டம், வடலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் அம்பேத்கார். இவர் வடலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். காவல் நிலையத்தின் முன்புறம், பின்புறம் ஆகியவற்றைச் சுத்தம் செய்து பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதேபோல் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில்  நடைபெறும் தைப் பூச விழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் தனது சிறப்பான ஏற்பாடுகள் மூலம் விழா அமைதியாகவும் எந்தவிதமான சிறு அசம்பாவிதமும் இல்லாமல் நடைபெற்றது.

 இன்ஸ்பெக்டர்

கடந்த பொங்கல் விழாவின்போது இன்ஸ்பெக்டர் அம்பேத்கார், நாடோடி இன மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு வசிக்கும் மக்கள் அவரை அன்புடன் வரவேற்றுள்ளனர். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் இரு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் ஹெல்மெட் இல்லாமல் இருப்பது குறித்து அறிந்து, அவர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறியுள்ளார். அவர்களுக்கு ஹெல்மெட் வாங்கச் சிரமப்படுவதை அறிந்தார். உடன் அங்கு இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு
ஹெல்மெட் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில் நேற்று நாடோடி இன மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்ற
இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் அங்கு இரு சக்கர வாகனம் வைத்திருக்கும் 40 நபர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினார். இவற்றை மகிழ்ச்சியுடன் அவர்கள் பெற்றுக்கொண்டனர்.

 நாடோடி இன மக்களுக்கு ஹெல்மெட் வழங்கும் இன்ஸ்பெக்டர்

பின்னர் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து  விழிப்பு உணர்வுப் பேரணியை இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் தொடங்கிவைத்தார். பேரணி அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து பண்ருட்டி ரோடு வழியாக வடலூர் காவல் நிலையத்தில் முடிந்தது. நாடோடி இன மக்கள், இனி ஹெல்மெட் அணிந்து வாகனங்கள் ஓட்டுவதாகவும், இதை வழங்கிய இன்ஸ்பெக்டர் அம்பேத்காருக்கு நன்றியும் தெரிவித்தனர்.