`இரண்டு நாடுகள்; இரண்டு பதக்கங்கள்!’ - கல்வி பயணம் போய் வந்த அரசுப் பள்ளி மாணவர் அசத்தல் | Karur Government school student finishes his foreign educational trip

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (31/01/2019)

கடைசி தொடர்பு:21:45 (31/01/2019)

`இரண்டு நாடுகள்; இரண்டு பதக்கங்கள்!’ - கல்வி பயணம் போய் வந்த அரசுப் பள்ளி மாணவர் அசத்தல்

 பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு தமிழ அரசு சார்பில் கல்பிப் பயணம் சென்று வந்த கரூர் அரசுப் பள்ளி இளம் விஞ்ஞானி மாணவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கரூர் ரயில் நிலையத்தில் சதிஷ்குமாருக்கு வரவேற்பு

கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர் சதிஷ்குமார் மேலை நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு அறிவியல் கல்விப் பயணம் முடித்து, இன்று 31.01.2019 ஊர் திரும்பினார். கரூர் வந்தடைந்த இளம் விஞ்ஞானி மாணவனுக்கு கரூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் தொழில் நுட்பம் துறையில் தனித்திறனுடன் புதிய கண்டுபிடிப்புகளை சமுதாயத்துக்கு வழங்கிய மாணவர்களைத் தேர்வு செய்து மேலை நாடுகளுக்குக் கல்வி பயணமாக வருடா வருடம் அழைத்துப் போகிறார்கள். அந்த வகையில், தமிழகத்திலிருந்து 50 மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் தேர்வு செய்யப்பட்டு, கடந்த ஜனவரி 20 முதல் 30-ம் தேதி வரை பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய மேலை நாடுகளுக்கு அறிவியல் கல்விப் பயணமாக சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

சதிஷ்குமாரின் கண்டுபிடிப்புகளில் ஒன்று

இக்குழுவில் கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் சதிஷ்குமார் என்ற மாணவரும் இடம் பெற்றிருந்தார். இந்தப் பள்ளியின் வழிகாட்டி ஆசிரியர் தனபாலின் உதவியோடு இவர் மேற்கொண்ட சூழலியல் கழிவறை, விவசாயத்தைப் பாதித்த தேனீக்களின் அழிவு உள்ளிட்ட ஆய்வுகளுக்காகத்தான் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றார்.
ஜனவரி 19-ம் தேதி கரூரிலிருந்து சென்னை கிளம்பி, 20-ம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலம் பின்லாந்து சென்றடைந்தார்.

பின்லாந்து நாட்டின் அறிவியல் தொழில்நுட்பம் மையம், பல்கலைக்கழகம், பள்ளிகளில் நடைபெறும் கற்றல் கற்பித்தல் ஆகியவற்றில் பங்கேற்றார். பின்னர், பின்லாந்திலிருந்து ஸ்வீடனுக்குக் கப்பல் மூலம் அறிவியல் பயணம் மெற்கொண்டு, அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விழங்கிய,`100 மாணவர்கள் ஐரோப்பா பயணம்' என்ற சான்றிதழும், சுடாக்கோம் தமிழச் சங்கம் வழங்கிய தங்கப் பதக்கம், பின்லாந்து தமிழ்ச் சங்கம் வழங்கிய வெள்ளிப் பதக்கம் பெற்று தமிழகம் திரும்பினார்.

சதிஷ்குமாரை பாராட்டும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தங்கவேல்

பின்லாந்து மற்றும் ஸ்வீடன் சென்று வந்த மாணவர் சதிஷ்குமாருக்கு கரூர் ரயில் நிலையத்தில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கருப்பண்ணன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தங்கவேல் அவர்களை மாணவர் சதிஷ்குமார் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் பள்ளித் தலைமை ஆசிரியர் தமிழரசன், வழிகாட்டி ஆசிரியர் பெ.தனபால் ஆகியோர் இருந்தனர்.

அப்போது பேசிய மாணவர் சதிஷ்குமார், ``கரூரை இதுவரை தாண்டாத எனக்குப் பின்லாந்து, ஸ்வீடன் போன்ற நாடுகளுக்கு போகும் அரிய வாய்ப்பு கிடைத்தது. இதுவரையில் நான் ரயிலில்கூட போனதில்லை. ஆனால், இந்தக் கல்வி பயணத்துக்காக ரயில் மட்டுமின்றி விமானம், கப்பல்ன்னு மூன்றிலும் பயணம் மேற்கொண்டேன். அந்த நாடுகளின் கல்விமுறையைப் பார்த்து வியந்தேன். இந்த அனுபவம் என் வாழ்நாளைக்கும் கிடைக்காதது’’ என்றார் நெக்குருகிப்போய்.