‘முழு பரிசோதனைக்குப் பிறகே ரத்தம் பெறப்படுகிறது!’ - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல் | 'Blood is Recovered Only after Full Testing!' - Dr Radhakrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (01/02/2019)

கடைசி தொடர்பு:10:52 (01/02/2019)

‘முழு பரிசோதனைக்குப் பிறகே ரத்தம் பெறப்படுகிறது!’ - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

‘‘தமிழகத்தில் மட்டுமே, புற்றுநோய் போன்ற நோய்களுக்கான விலை உயர்ந்த மருந்துகள் இலவசமாக வழங்கப்படுவதாக’’ சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 டாக்டர் ராதாகிருஷ்ணன்

வேலூரில், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ‘‘போலியோவுக்கான, டெக்னிக்கல் அட்வைஸரி கமிட்டி தேசிய அளவில் செயல்படுகிறது. தமிழகத்தில், 14 ஆண்டுகளாகப் போலியோ இல்லை. இந்திய அளவில் மூன்று, நான்கு ஆண்டுகளாக இல்லை. சொட்டு மருந்து வழங்கும் தேதியை தள்ளி வைத்ததற்கு, நிதிப் பற்றாக்குறை காரணமில்லை. மத்திய-மாநில அரசுகளிடம், போலியோ சொட்டு மருந்துகள் வழங்குவதற்கான நிதி இருக்கிறது. ஒரே நேரத்தில், இந்தியா முழுவதும் சொட்டு மருந்து கொடுத்தால் தான் பயனுள்ளதாக இருக்கும். டெக்னிக்கல் அட்வைஸரி கமிட்டி தான், இதற்கான தேதியை நிர்ணயிக்கும்.

புற்றுநோய் போன்ற நோய்களுக்கான விலை உயர்ந்த மருந்துகள் தமிழகத்தில் மட்டுமே இலவசமாக வழங்கப்படுகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளில் மூன்று மாதங்களுக்கான பொது மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. ஸ்பெஷாலிட்டி மருந்துகள் மட்டுமே தேவைக்கேற்ப கேட்டு விநியோகம் செய்கிறோம். ரத்த வங்கியைப் பொறுத்தவரை, தேசிய அளவில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளைத் தான் பின்பற்றுகிறோம். தமிழகத்தில் ரத்தம் அளிப்பவர்களிடம் முழு பரிசோதனை செய்த பிறகே ரத்தம் பெறப்படுகிறது. இதற்கான, கண்காணிப்பை விரைவுபடுத்தியுள்ளோம். தன்னார்வத்தோடு ரத்தம் அளிக்க வருபவர்களை ஊக்குவிக்க பல்வேறு விழிப்பு உணர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும்.

உப்பு, சர்க்கரை, எண்ணெய் அளவைக் குறைவாக பயன்படுத்தினாலே நமக்குப் பல நோய்கள் வராது. பயிற்சியைத் தாண்டி, மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதும் அவசியம். துணை சுகாதார நிலையங்களில் 12 வகையான பரிசோதனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 25 வகையான மருத்துவ பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. உடல் பரிசோதனை செய்து கொள்வதால், நோய் வருவதற்கான அறிகுறிகளை அறிந்து, தடுக்க முடியும். அடிக்கடி கை கழுவும் பழக்கத்தினால் பல நோய்களை வராமல் தடுக்கலாம். போலி மருத்துவர்கள் குறித்து சுகாதார இணை இயக்குநர் அல்லது 104 தொலைப்பேசி எண்ணில் புகார் தெரிவித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.