உயர் அதிகாரிகளின் உத்தரவை செயல்படுத்தவில்லை! - வட்டாரக் கல்வி அலுவலர்கள் 3 பேர் சஸ்பெண்டு! | Higher official order doesn't followed three Regional Education Officers suspend

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

கடைசி தொடர்பு:10:45 (01/02/2019)

உயர் அதிகாரிகளின் உத்தரவை செயல்படுத்தவில்லை! - வட்டாரக் கல்வி அலுவலர்கள் 3 பேர் சஸ்பெண்டு!

புதுக்கோட்டை மாவட்டத்தில், 'கல்வித்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவை செயல்படுத்தவில்லை' என்று கூறி, வட்டாரக் கல்வி அதிகாரிகள் 3 பேரை பணியிடை நீக்கம்செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

சஸ்பெண்டு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டாரக் கல்வி அலுவலர்கள் அலெக்ஸ்சாண்டர், வெங்கடாசலம் மற்றும் அரிமளம் வட்டாரக் கல்வி அலுவலர் ஞானக்கனி ஆகியோர், கல்வித் துறை உயர் அதிகாரிகளின் உத்தரவைப் பின்பற்றவில்லை' என்று கூறி, 3பேரையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா பணியிடை நீக்கம்செய்து உத்தரவு பிறப்பித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அதிரடி சஸ்பெண்டு நடவடிக்கை, கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கல்வித் துறை அதிகாரிகளிடம் பேசினோம்,  "ஆசிரியர்கள் போராட்டம் முடியும் தறுவாயில், ஆசிரியர்கள் சிலர் பள்ளிக்குச் சென்று பள்ளியைத் திறக்கவில்லை. குறிப்பாக, கந்தர்வகோட்டை வட்டாரத்தில் மட்டும் போராட்டத்தை வாபஸ் பெற்ற அன்று மட்டும் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. திறக்கப்படாமல் இருந்த பள்ளிகளின் கதவை உடைத்து, ஆசிரியர் பயிற்சி மாணவிகளைக் கொண்டு  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிகளைச் செயல்படவைத்தார். இந்த நிலையில்தான், மீண்டும் பணிக்கு வரும் ஆசிரியர்களிடம் முறையான விளக்கக் கடிதம் கேட்டும், முதன்மை கல்வி அலுவலரைப் பார்த்த பிறகுதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை இந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவுகளைப் பின்பற்றத் தவறியதால்தான் சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.