`குடும்ப வாழ்க்கை; 120 கோடி சொத்து அபகரிப்பு?' - கும்பகோணம் வீர சைவ மடாதிபதியைச் சுற்றும் சர்ச்சை | fight in Kumbakonam Veerasivasam Math

வெளியிடப்பட்ட நேரம்: 08:59 (01/02/2019)

கடைசி தொடர்பு:10:14 (01/02/2019)

`குடும்ப வாழ்க்கை; 120 கோடி சொத்து அபகரிப்பு?' - கும்பகோணம் வீர சைவ மடாதிபதியைச் சுற்றும் சர்ச்சை

கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்துக்குள் வரும் 3-ம் தேதி  நுழைவோம். புதிய மடாதிபதியாகப் பொறுப்பேற்றவர் அறிவிப்பால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகண்ட சுவாமி

கும்பகோணத்தில், பழைமை வாய்ந்த வீரசைவ பெரிய மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக ஏற்கெனவே ஒருவர் இருந்த நிலையில், புதிதாக ஒருவர் மடாதிபதியாகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டதோடு, காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர். இந்த நிலையில், வரும் 3-ம் தேதி மடத்துக்குள் நுழைவோம் என புதிய மடாதிபதியாகப் பொறுப்பேற்றவர் மற்றும் அவரின் சட்ட ஆலோசகர் கூட்டாகத் தெரிவித்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுத் திரும்பிய புதிய மடாதிபதியாகப் பொறுப்பேற்ற பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள் மற்றும் மடத்தின் சட்ட ஆலோசகரும், மடத்தின் நிர்வாகக் குழு உறுப்பினருமான குருசாமி ஆகியோர் ஒன்றாக செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``நீலகண்ட மகாசுவாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக, இவர் பிரமச்சரியத்தை கைவிட்டு, குடும்ப வாழ்க்கை நடத்திவருகிறார். மடத்தில் இருந்த சமையலரான கங்காதரனை, இளைய மடாதிபதி எனத் தன்னிச்சையாக அறிவித்தார். கங்காதரனின் பிறப்புச் சான்றிதழில் தந்தை பெயரில் நீலகண்ட சுவாமிகளின் பெயர் அச்சிடப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. சமையலராக வந்த கங்காதரனை இளைய மடாதிபதி என அறிவித்தார்.

வீரசைவ பெரிய மடம்

கங்காதரன், மடத்தின் ஆகம விதிகளுக்கு எதிராகத் தவறு செய்துவிட்டு மடத்தை விட்டு ஓடியவர். அவர் மீண்டும் மடத்துக்கு வந்தபோது, அவர் தவறு செய்துவிட்டுச் சென்றவர், மீண்டும் மடத்திற்குள் சேர்க்கக் கூடாது என்றோம். ஆனால் நீலகண்டன் சுவாமிகள், தனது மகன் என்ற காரணத்தால் மீண்டும் அவரை மடத்துக்குள் அனுமதித்தார். அத்துடன், மடத்தின் பின்புறம் உள்ள இடத்தைத் தனியாரிடம் ரூ.2 கோடிக்கும், மடத்தின் முன்புறமுள்ள 10 கடைகளுக்கு ரூ. 42 லட்சமும், திருவாரூரில் 32 ஆயிரம் சதுர அடி இடத்தை ரூ. 2 கோடி வரையும் கைமாற்றிவிட்டு பெற்றுள்ளார்.

இதேபோல, கர்நாடகாவில் 8 ஏக்கர் நிலத்தை விற்று ரூ.5 கோடி வரை பெற்றுள்ளார் எனத் தெரிகிறது. கர்நாடகாவிலுள்ள, மடத்துக்குச் சொந்தமான இடத்தை மெட்ரோ நிறுவனம் எடுத்துக்கொண்டு, நான்கு வங்கிகளில் ரூ.120 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. அந்த 120 கோடி பணம், மடத்தின் தேவைகளுக்கு  மட்டும் பயன்படுத்த வேண்டும் என முடிவுசெய்தோம். ஆனால் நீலகண்ட சுவாமிகளும், கங்காதரனும் மடத்தின் சொத்துகளையும், ரூ.120 கோடியையும் அபகரிக்கவே தொடர்ந்து செயல்படுகிறார்கள்.

புதிய மடாதிபதி

இந்நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், மடாதிபதி தெய்வ காரியங்களை மட்டும் செய்ய வேண்டும், அதன் நிர்வாகம் மற்றும் வரவு - செலவு கணக்குகளை நிர்வாக மேலாளர் மற்றும் நிர்வாகப் கமிட்டியினர் பார்த்துக்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இதுவரை நிர்வாகக் கமிட்டியினருக்கு எந்த வரவு செலவு கணக்குகளையும் காட்டவில்லை. இவரது தன்னிச்சையான நடவடிக்கையால் அதிருப்தி ஏற்பட்டதையடுத்து, கும்பகோணம் மடத்தின் மறுசீரமைப்புத் திட்டக்  குழு சார்பில், பெங்களூர் சித்திரதுர்கா பெரிய மடாதிபதியை அணுகி,  நீலகண்ட சுவாமிகளின் முறைகேடுகள்குறித்து விளக்கினோம்.

அந்த திட்டத்தின்படி, பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகளுக்கு அவர் பட்டாபிஷேகம் செய்துவைத்தார். இதனை விரும்பாத நீலகண்ட சுவாமிகள், அன்றைய தினம் ரவுடிகளுடன் வந்து புதிய மடாதிபதியை இரும்பு ராடு, பைப் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளார். இதையடுத்து, வரும் 3-ந் தேதி, வீரசைவ பெரிய மடத்தின் பக்தர்கள் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம், நாங்கள் அனைவரும் வீரசைவ மடத்துக்குள் சென்று,  நீலகண்ட சுவாமிகளிடம் இனிமேல் மடாதிபதியாக இருக்கக் கூடாது என்றும், குடும்ப வாழ்க்கையில் உள்ள நீங்களும் (நீலகண்டன்) உங்களது மகன் கங்காதரனும் சட்டப்படி மடாதிபதியாக இருக்கக் கூடாது எனக் கூறுவோம்.

புதிய மடாதிபதி

அவர் வெளியேறினாலும் வெளியேறாவிட்டாலும், புதிய மடாதிபதியான பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகளை அந்த ஆசனத்தில் அமரவைப்போம். அதன் பிறகு, நாங்கள் மடத்தை விட்டு வெளியேறமாட்டோம். புதிய மடாதிபதியான பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில், முதல் குற்றவாளியாக நீலகண்டசுவாமி மற்றும் இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். இதில், இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அந்த இரண்டு பேரையும் கைதுசெய்துவிட்டனர். விரைவில் நீலகண்டசுவாமியும் கைதுசெய்யப்படுவார் எனத் தெரிகிறது" என்றார்.

இதுகுறித்து 97-வது பீடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஜகத்குரு நீலகண்ட சாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள், ``நான் இனிமேல் மடத்தை விட்டுசெல்ல மாட்டேன். யாரையும் மடாதிபதியாக இருக்க அனுமதிக்க மாட்டேன். முன்பிருந்த நிர்வாகக் கமிட்டியினரோ, புதியதாக வந்தவர்களோ அல்லது சித்திரதுர்கா மடத்தைச் சேர்ந்தவர்கள் வந்தாலோ உள்ளே நுழைய விடமாட்டேன், விரட்டியடிப்பேன்" என ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதற்கிடையில், ஸ்ரீலஸ்ரீ ஜகத்குரு நீலகண்ட சாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், கும்பகோணம் வீர சைவ மடத்துக்குள் நான் இல்லாதபோது அத்துமீறிப் புகுந்து, பட்டாபிஷேகம் செய்துவைத்த பெங்களூர், சித்திரதுர்கா மடத்தின் ஸ்ரீ சிவமூர்த்தி முருக சாராணாரூ மடாதிபதி ஸ்ரீ முருகராஜேந்திர பெரிய மடாதிபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்துள்ளார். இதனால், இந்தப் பிரச்னை தற்போதைக்கு ஓயாது என்றே தெரிகிறது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க