`திருமணம் நடக்கணும், கடன் தீரணும்!'- மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்! | Viruthachalam temple festival

வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (01/02/2019)

கடைசி தொடர்பு:11:05 (01/02/2019)

`திருமணம் நடக்கணும், கடன் தீரணும்!'- மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் சமயபுரம் பக்தர்கள் மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மாரியம்மன்

விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் ஜெகமுத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வருடந்தோறும் தை மாதம் பக்தர்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து யாத்திரை செல்வது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு 20 வது வருடமாகப் பக்தர்கள் யாத்திரை செல்வதை முன்னிட்டு  26-ம் தேதி மாலை அணிவித்து திருமணம், குழந்தைச் செல்வம், கடன் பிரச்னை உட்பட வேண்டுதல்களுடன் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.

முன்னதாக ஜெகமுத்துமாரி அம்மனுக்குப் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஜெகமுத்துமாரியம்மனை சமயபுரம் யாத்திரை செல்லும் பக்தர்கள் ஜங்ஷன் சாலை, பாலகரை, கடை வீதி, தென் கோட்டை வீதி வழியாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்கு கொண்டு சென்றனர். பின்னர் விருத்தகிரீஸ்வரர் கோயில் வளாகத்தில் அம்மன் எழுந்தருளப் பம்பை உடுக்கை அடித்து தாலாட்டுப் பாடல் பாடப்பட்டது.

மண்சோறு சாப்பிடும் பக்தர்கள்

இதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். தொடர்ந்து வரும் 3-ம் தேதியன்று ஜங்ஷன் சாலையில் கோயிலில் அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த நிகழ்ச்சி முடிவடைந்த உடன் பக்தர்கள் இருமுடி கட்டி சமயபுரத்துக்குச் செல்ல உள்ளனர்.