`என் உறவினரால் சாகப்போறேன்!' - நண்பர்களுக்கு வீடியோ அனுப்பி உயிரை மாய்த்த விவசாயி | "My relatives are responsible for my suicide!" -Karur youth released whatsapp video before suicide

வெளியிடப்பட்ட நேரம்: 12:57 (01/02/2019)

கடைசி தொடர்பு:12:57 (01/02/2019)

`என் உறவினரால் சாகப்போறேன்!' - நண்பர்களுக்கு வீடியோ அனுப்பி உயிரை மாய்த்த விவசாயி

தங்கராஜ் உடல்

'எனது சாவுக்குக் காரணம் எனது உறவினர்கள்தான். என் அப்பாவோட அண்ணன்தான் சொத்தை எனக்கு பிரித்துத் தராமல் ஏமாற்றுகிறார். எனது பெரியப்பாவையும், பெரியப்பா மகனையும் கைதுசெய்யவும்" என்று வீடியோவில் பேசி, அதை முக்கியப் புள்ளிகளுக்கு அனுப்பிவிட்டு, தற்கொலை செய்துகொண்ட கரூர் இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தங்கராஜ் உறவினர்கள் சோகமாக...

சென்னையில், இதேபோல டிரைவர் ஒருவர், 'எனது சாவுக்குக் காரணம் போலீஸ்தான்' என்றபடி தற்கொலைசெய்துகொண்ட நிலையில், அதே பாணியில் வீடியோவில் தற்கொலைக்கான காரணமானவர்களை அடையாளம் காட்டிவிட்டு, கரூர் இளைஞரும் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே உள்ள புன்னம் ஊராட்சி, பழமாபுரம் எனும் ஊரில் வசித்துவந்தவர் விவசாயி தங்கராஜ். இவருக்குத் திருணமாகி இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். நிலம் சம்பந்தமான பிரச்னை இவருக்கும், இவரது நெருங்கிய உறவினர்களுக்கும் இடையில் கடந்த 2 மாத காலமாக இருந்துவந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்படி நிலப் பிரச்னையில் தனது தந்தைக்கும், தந்தையின் உறவினர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனம் உடைந்து போயுள்ளார் தங்கராஜ்.

வேலாயுதம்பாளையம் காவல் நிலையம்

இதனால் விரக்தியான அவர், நேற்று மாலை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ள வீடியோவில், ``தன்னுடைய தற்கொலைக்குக் காரணம் தனது உறவினர்கள்தான் என்று பெயர் குறிப்பிட்டு, காணொளியை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பியுள்ளார். அதேபோல, தற்கொலைசெய்து கொள்ள பூச்சிக்கொள்ளி மருந்தை சாப்பிட்டுள்ளார். பதறிப்போன அவரது நண்பர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று பார்த்துள்ளனர். ஆனால், இவர்கள் போவதற்குள் வாயில் நுரைதள்ளிய நிலையில் தங்கராஜ் உயிருக்குப் போராடியிருக்கிறார். தாமதிக்காமல் தங்கராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி தங்கராஜ் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய வேலாயுதம்பாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பிரேதப் பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  'தங்கராஜ் சாவுக்குக் காரணமானவர்களை உடனடியாக காவல் துறை கைதுசெய்ய வேண்டும்' என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனது தற்கொலைக்குக் காரணமானவர்களின் பெயர்கள் உள்பட, அனைத்து தகவல்களையும் வீடியோவில் பேசி, அதை நண்பர்களுக்கு அனுப்பிவைத்துவிட்டு, தற்கொலை செய்துகொண்ட இளைஞரால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.