`வருவோர் போவோரைக் கடித்துக் குதறுகிறது!'- குரங்கால் நிம்மதியின்றி தவிக்கும் கிராமம் | People leaving village because of monkey

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (01/02/2019)

கடைசி தொடர்பு:13:50 (01/02/2019)

`வருவோர் போவோரைக் கடித்துக் குதறுகிறது!'- குரங்கால் நிம்மதியின்றி தவிக்கும் கிராமம்

monkey

மனிதர்களையும், ஆடு மாடுகளையும் கடித்துக் குதறும் ஒரு குரங்கால், கிராமம் ஒன்று நிம்மதியின்றி தவிக்கிறது.

குரங்கை பிடிக்க வைக்கப்பட்டுள்ள கூண்டு

நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ளது தென்னலக்குடி கிராமம் இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் எங்கிருந்தோ வந்த ஆண் குரங்கு ஒன்று கடந்த 2 மாத காலமாக இக்கிராமத்தில் சுற்றித்திரிகிறது. வெறி பிடித்ததுபோல் காணப்படும் அக்குரங்கு கண்ணில் படும் மனிதர்களையும் கால்நடைகளையும் கடித்துக் குதறி விடுகிறது. இதுவரைக்கும் 15 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் 8 ஆடு, மாடுகளையும் கடித்து காயப்படுத்தி உள்ளது. வீடு புகுந்து உணவுப் பொருள்களை வீணாக்கி விடுகிறது. கூரைகளைப் பிய்த்து எறிகிறது.

தனிமையில் நடமாடவே அச்சப்படுகின்றனர். குரங்கிடம் சிக்கிய பெண்கள் தப்பிக்க படாதபாடு பட்டுள்ளனர். மேலும் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் அச்சப்படுகின்றனர். எனவே மிகவும் பீதியடைந்த மக்கள் `குரங்கைப் பிடித்து கிராமத்தைவிட்டு அப்புறப்படுத்த வேண்டும்' என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதன்படி நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் வனத்துறையினர் கடந்த 15 நாள்களாக, தென்னலக்குடியில் முகாமிட்டு, குரங்கைப் பிடிக்க கூண்டு வைத்து காத்திருக்கின்றனர். ஆனால்  அக்குரங்குக் கூண்டில் சிக்காமல் தப்பித்து விடுகிறது. ``குரங்கை  எப்போது பிடிப்பார்கள். எப்போது நிம்மதியாக வாழ்வது" என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 இதுபற்றி வனத்துறையினரிடம் பேசியபோது, ``இக்குரங்கு வேறு எங்கோ சேட்டைகள் செய்து, கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட குரங்காக இருக்கும் போலிருக்கிறது. எனவே கூண்டைக் கண்டாலே மிகவும் உஷாராகி அருகில் நெருங்குவதில்லை. நாங்களும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் பயனில்லை. எனவே அடுத்தகட்டமாக மயக்க ஊசி போட்டுப் பிடிக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் இங்கிருந்து குரங்கை அப்புறப்படுத்துவோம்" என்றார்கள்.

படங்கள் : பிரசன்னா