பழங்குடி இனக் குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி! கடலூர் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சி | Compulsory education for tribal children by Cuddalore government school teachers

வெளியிடப்பட்ட நேரம்: 14:16 (01/02/2019)

கடைசி தொடர்பு:14:18 (01/02/2019)

பழங்குடி இனக் குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி! கடலூர் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சி

ஒடுக்கப்பட்ட பழங்குடி இருளர் மக்களின் வாழ்கையில் ஒளியேற்றி, கல்விக் கனவை நனவாக்கி, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் இந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.  

பழங்குடி இனக் குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி! கடலூர் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சி

குறித்த நேரத்துக்குப் பள்ளிக்கு வராமை, அப்படியே வந்தாலும் மாணவர்களுக்குப் பாடம் நடத்தாமை, இடையிடையே விடுமுறை, பள்ளி வேளையில் போனில் பேசுதல் போன்ற வேலைகளில் செயல்பட்டு வரும் பல அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக, சில ஆசிரியர்களும் கடமை தவறாது அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவதை நம்மால் பார்க்க முடிகிறது. கடலூர் மாவட்டம் அரசுப் பள்ளி ஒன்றில்தான் அப்படிப்பட்ட உணர்வுடன் அனைத்து ஆசிரியர்களும் பணியாற்றுகிறார்கள். 

கடலூர் மாவட்டம் கிள்ளைப் பேரூராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகரில், பழங்குடி இருளர் இன 285 குடும்பங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த இவர்களுக்குக் கல்வி அறிவு என்பது முற்றிலும் இல்லை. இதனால் இப்பகுதியில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை மூலம் ஆரம்பப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளி கடந்த 2003-ம் ஆண்டு அரசு தொடக்கப் பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 40 மாணவ, மாணவிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளி, இன்று ஒன்றிய நடுநிலைப்பள்ளியாக மாற்றம் பெற்று 200 மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளியாக உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில் குடிசையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளி, இன்று வளர்ந்து போதுமான கட்டட வசதி, குடிநீர், கழிப்பறை என அனைத்து வசதிகளுடன் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்குக் கல்விச் சேவையை வழங்கி வருகிறது. 

கடலூர் மாவட்டம் அரசுப் பள்ளி

பள்ளியின் தலைமை ஆசிரியர் குமரவேல் மற்றும் 7 ஆசிரியர்களுடன் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியில், ஆசிரியர்கள் அனைவரும் கடமைக்குப் பணியாற்றாமல், சேவை மனப்பான்மையுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. கையெழுத்துகூடப் போடத் தெரியாமல் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம்கூட இல்லாமல்> தினம்,தினம் பொருளாதாரத்தைத் தேடி ஓடுவதிலேயே வாழ்க்கையில் பெரும் பகுதியைச் செலவழித்தனர், இந்தக் கிராம மக்கள்.இப்படிப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்ட பின்னர்தான் நாகரிகமாக வாழக் கற்றுக்கொண்டுள்ளனர். கல்வி என்றால் என்ன என்றே தெரியாத இந்த மக்களில், இன்று 3 பேர் பொறியாளர்களாக உள்ளனர். மேலும்,30-க்கும் மேற்பட்டவர்கள் கலைக் கல்லூரியில் பட்டம் படித்து வருகின்றனர். சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்தப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கல்வி பணியாற்றி வருவது அறிந்து நாம் அந்தப் பள்ளிக்குச் சென்றோம்.

சுகாதாரமான சூழ்நிலையில் அனைத்துக் கட்டமைப்பு வசதிகளுடன் செயல்பட்டு வரும் அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர் குமரவேலிடம் பேசினோம். ``இப்பகுதியில் வசிக்கும் மக்கள், கல்வியறிவு என்பது முற்றிலும் இல்லாதவர்களாக இருந்தனர். கையெழுத்துகூடப் போடத் தெரியாமல் கைநாட்டாக இருந்த தங்களது பெற்றோர்களுக்குக் கையெழுத்து போடக் கற்றுக்கொடுத்தது எங்கள் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள்தான். ஆரம்பத்தில் மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க  நாங்கள் மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை இருந்தது. எங்கள் ஆசிரியர்கள் காலை பள்ளிக்கு வந்தவுடன் மாணவ, மாணவிகளின் வீடு தேடிச் சென்று அவர்களைக் கிளம்பச் செய்து அழைத்து வரும் பணியே பெரும் பணியாக இருந்தது. நாங்கள் இந்த மக்களுக்குக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அடிக்கடி விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருவோம். 

கடலூர் மாவட்டம் அரசுப் பள்ளி

மாதந்தோறும் எல்லா நாள்களும் பள்ளிக்கு வரும் மாணவர்களை பிரேயரில் பாராட்டுவது, அவர்களின் பெற்றோரைப் பள்ளிக்கு அழைத்து அவர்களைத் தேசியக்கொடி ஏற்றச் செய்து கௌரவிப்பது எனத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். மாணவர்களின் பிறந்த நாளன்று அவர்களின் படத்துடன் கூடிய வாழ்த்து அட்டை வழங்கி மகிழ்விப்பது எனப் பல வகைகளிலும் அவர்களை ஊக்குவித்து வருகிறோம். நன்கு திறமை வாய்ந்த இந்த மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் செஸ் போட்டி, ஓவியப் போட்டி என அனைத்திலும் பல்வேறு பரிசுகளைப் பெற்று வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் பட்ட சிரமங்களுக்கு இன்று இந்த மக்கள் மத்தியில் நல்ல மாற்றம் உருவாகியுள்ளது. இதற்கு, நான் மட்டும் காரணம் அல்ல, என்னுடன் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, ஒருங்கிணைந்து செயல்படுவதால் இது சாத்தியமாகியது" என்கிறார் மகிழ்ச்சியுடன். 

அரசுப் பள்ளி

இந்தப் பள்ளியில் வகுப்பறையில் ஓவியங்கள் வரைந்து தனியார் மெட்ரிக் பள்ளி வகுப்பறைபோல் மாற்றி மாணவர்களுடன், மாணவராக அமர்ந்து அவர்களுக்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியை சசிகலா, ``பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் ஆர்வமுடன் படிப்பதற்கு நல்ல சூழல் முதலில் அமைய வேண்டும். எனக்கு ஓவியம் நன்றாக வரும். அதனால், நானே வகுப்பறையில் ஓவியங்கள் வரைந்து வகுப்பறைச் சூழலை மாற்றினேன். இதற்கு மாணவ, மாணவிகளிடம் நல்ல மாற்றம் தெரிகிறது. அவர்களைக் கையில் பிரம்பு வைத்துக்கொண்டு மிரட்டிப் படிக்கச் செய்யும் ஆசிரியராக இல்லாமல் அவர்களுடன் அன்பாகப் பழகி, அவர்களுக்குத்  தகுந்தாற்போல் என்னை மாற்றிக்கொண்டு பாடம் சொல்லித் தருகிறேன். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. 

அவர்களுக்குப் பாடம் மட்டும் சொல்லித் தராமல் கதைகள், பாட்டு, நாட்டுநடப்பு என அனைத்தையும் கற்றுத் தருகிறேன். பெண் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும், மற்றவர்களிடம் எப்படிப் பழக வேண்டும், எது குட் டச், எது பேட் டச் போன்ற அனைத்து விஷயங்களும் கற்றுத் தருகிறோம்" என்றார் சந்தோஷமாக. 

பள்ளிக்கு வந்தோம், பாடம் நடத்தினோம் எனக் கடமைக்குப் பணியாற்றாமல், இந்த ஒடுக்கப்பட்ட பழங்குடி இருளர் மக்களின் வாழ்கையில் ஒளியேற்றி, கல்விக் கனவை நனவாக்கி, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் இந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.  


டிரெண்டிங் @ விகடன்