`பிரமாண்டமா கொண்டாட இருந்தோம், தடுத்துட்டாங்க!’ - ராமதாஸ் மீது பாயும் காடுவெட்டி குரு ஆதரவாளர் | Kaduvetti guru supporters slams Ramadoss

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (01/02/2019)

கடைசி தொடர்பு:17:00 (01/02/2019)

`பிரமாண்டமா கொண்டாட இருந்தோம், தடுத்துட்டாங்க!’ - ராமதாஸ் மீது பாயும் காடுவெட்டி குரு ஆதரவாளர்

காடுவெட்டி குருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், பா.ம.க-விலிருந்து நீக்கப்பட்ட வழுவூர் மணி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீன்சுருட்டி பகுதியில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு பா.ம.க செய்யும் வேலை எனக் காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள் குற்றசாட்டியுள்ளனர்.

காடுவெட்டி குரு

பா.ம.க-வில் முன்னணித் தலைவராகவும் முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும் இருந்தவர் காடுவெட்டி குரு. உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த குரு, கடந்த மே மாதம் 25-ம் தேதி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். குரு இருந்து என்ன செய்வாரோ அதை நாங்கள் செய்கிறோம் என ராமதாஸ், அன்புமணி வாக்குறுதி அளித்தனர். அதன் பிறகு அவரின் குடும்பத்துக்குப் பல்வேறு பிரச்னைகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. அதற்கு இன்றளவும் விடைதெரியவில்லை.

காடுவெட்டு குருவின் ஆதரவாளர்கள்

அதைத் தொடர்ந்து காடுவெட்டி குரு பிப்ரவரி 1-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், பா.ம.க-விலிருந்து நீக்கப்பட்ட வழுவூர் மணி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீன்சுருட்டி பகுதியில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழுவூர் மணி ஏற்கெனவே பா.ம.க-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் காவல்துறை பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், 144 பிரிவின் கீழ் வி.ஜி.கே.மணி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் காடுவெட்டி மற்றும் மீன்சுருட்டிப் பகுதியில் இன்று முதல் பிப்ரவரி 10-ம் தேதி வரை நுழையத் தடை விதித்து உடையார்பாளையம் ஆர்.டி.ஓ உத்தரவிட்டுள்ளார்.

காடுவெட்டு குரு பிறந்தநாளில் குவிந்த ஆதரவாளர்கள்

இது குருவின் ஆதரவாளர்களிடம் பேசினோம். `இன்று குரு அண்ணனின் பிறந்த நாள் விழாவை பிரமாண்டமாக நடத்தலாம் என்று பலவிதத்தில் ஏற்பாடுகள் செய்திருந்தோம். ஆனால், வேண்டுமென்றே பல்வேறு வழிகளில் அதிகாரிகளும் பா.ம.க-வினரும் இடையூறு செய்துகொண்டே இருக்கிறார்கள். பா.ம.க-வினர் வேண்டுமென்றே வழுவூர் மணி வந்தால் இப்பகுதியில் பிரச்னை ஏற்படும் என்று புகார் கொடுத்திருக்கிறார்கள். அதன் பேரில் அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர்.

காடுவெட்டு குரு படத்துக்கு மாலை போடும் ஆதரவாளர்

அதேபோல் ராமதாஸூம் காடுவெட்டியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் தொண்டர்கள் யாரும் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம். 10 நாள்கள் கழித்து சென்று மரியாதை செலுத்துங்கள் என்று அறிக்கை விடுகிறார். மணி வருவதால் இங்கு என்ன பிரச்னை எழப்போகிறது. அதை முதலில் சொல்லுங்கள். காடுவெட்டி குருவின் பின்னால் இருக்கும் தொண்டர்களை இப்பகுதியில் வருவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ம.க-வினர் செய்யும் வேலை இது. அவர்கள் சொல்லிக்கொடுத்த வேலையை அதிகாரிகளும் செய்துகொண்டிருக்கிறார்கள்’’ என்று கொந்தளிக்கிறார்கள் குருவின் ஆதரவாளர்கள்.