`மூன்று மாதத்தில் ஆட்சி மாறும்!’ - கிராம சபைக் கூட்டத்தில் உதயநிதி | Udhayanidhi stalin participates in DMK organised gramasabha meet in Theni district

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (01/02/2019)

கடைசி தொடர்பு:18:05 (01/02/2019)

`மூன்று மாதத்தில் ஆட்சி மாறும்!’ - கிராம சபைக் கூட்டத்தில் உதயநிதி

``இரண்டு மூன்று மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். மக்களுக்கான நலத்திட்டங்கள் கிடைக்காததற்கு மோடியே காரணம்’’ என ஆண்டிபட்டி அருகே நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

கிராம சபை நடத்திய உதயநிதி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி கிராமத்தில் தி.மு.க சார்பாக நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அங்கே கூடியிருந்த கிராம மக்கள், ``தங்களது பகுதிக்கு குடிநீர் வசதி இல்லாததால் முல்லை பெரியாற்றில் இருந்து குழாய் அமைத்து தண்ணீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து பிச்சம்பட்டி கிராமத்தில் சாலை வசதிகள், கழிப்பறை உள்ளிட்ட எந்த வசதிகளும் செய்து தரவில்லை எனப் புகார் தெரிவித்தனர். மேலும், தங்களது பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைத் தூர் வாரி தண்ணீர் தேக்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தனர்.

திமுக நடத்திய கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள்

தொடர்ந்து பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றார். பின்னர், பேசிய உதயநிதி ஸ்டாலின், ``இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் ஆட்சி மாற்றம் வரும். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சராவார். மக்களுக்கான திட்டங்கள் கிடைக்காமல் இருப்பதற்குப் பிரதமர் நரேந்திரமோடியே காரணம். வெளிநாட்டில் சுற்றுவதிலே குறிக்கோளாக இருக்கிறார் மோடி. இந்தியாவில் அவர் கால்படுவதே கிடையாது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை நீக்காமல் இவர்களால் எப்படி ஆட்சி அமைக்க முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ஆண்டிபட்டி தொகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் அதிகம் இருப்பதால் ஜவுளிப்பூங்கா அமைத்து நடைமுறைக்கு வராமல் உள்ளது எனத் தெரிவித்தார். விரைவில் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் போடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லெட்சுமணன், ஐ.பெரியசாமி, தேனி மாவட்டத் தி.மு.க பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.