புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தினசரி பாடங்களுடன் மாணவர்களுக்கு இலவசமாகத் தொழிற்கல்வி பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவணத்தாங்கோட்டை மேற்கு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு பள்ளி ஆசிரியர்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது மாணவர்களின் எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு, நடுநிலைப்பள்ளிகளில் முதல்முறையாகப் போட்டோஷாப், சிஸ்டம் சர்வீஸ், செல்போன் சர்வீஸ், பேஷன் டிசைனிங், ரோபோடிக்ஸ் உள்ளிட்ட இலவச தொழிற்பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கிய பயிற்சி வகுப்பில் கம்ப்யூட்டர் சர்வீஸ் பொறியாளர் சத்யா கலந்துகொண்டு மாணவர்களுக்கு சிஸ்டம் சர்வீஸ் செய்தல் குறித்துத் தெளிவாக விளக்கினார்.
2 மணி நேரம் வரையிலும் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு கற்றுக்கொண்டனர். இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் கூறும்போது, `மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டே இதுபோன்ற தொழிற்பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க முடிவெடுத்தோம். 7, 8 படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அந்தந்தத் துறை வல்லுநர்களை வரவழைத்து மாணவர்களுக்கு இந்தப் பயிற்சிகளை அளிக்கிறோம்.
மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து தொழிற்கல்வி படிப்பதற்கு தற்போது நடத்தப்படும் தொழிற்பயிற்சி வகுப்புகள் உபயோகமாக இருக்கும். தற்போதைய மாணவர்கள் பலரும் இதுபோன்று தொழிற்கல்வி பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே, தான் அது போன்றவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்தப் பயிற்சிகளை வழங்குகிறோம். இதனால், மாணவர்களின் தினசரி பாடங்கள் பாதிக்காத வகையில் வாரத்தில் ஒரு நாள் இந்த தொழிற்கல்வி பயிற்சிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.