`இரவு நேரத்துல வீட்டுல சத்தம் கேட்குது, உடனே வாங்க!'- பதறி வந்த பெண்ணுக்குக் கிடைத்த அதிர்ச்சி | Gold and cash theft creats panic among peramblur peoples

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (01/02/2019)

கடைசி தொடர்பு:18:40 (01/02/2019)

`இரவு நேரத்துல வீட்டுல சத்தம் கேட்குது, உடனே வாங்க!'- பதறி வந்த பெண்ணுக்குக் கிடைத்த அதிர்ச்சி

வீட்டின் பூட்டை உடைத்து, 10 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரம்பலூரில் நடைபெற்றுள்ளது. தொடர் கொள்ளைச் சம்பவங்களால் பொது மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்திருக்கிறார்கள். 

                                                        கொள்ளை நடந்த வீடு

பெரம்பலூர் முத்துநகரைச் சேர்ந்தவர் மருதாம்பாள். இவர்களுக்கு 2 மகள்களும் இரு மகன்களும் உள்ளனர். 2 மகள்களும் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர். ஒரு மகன் வெளியூரில் வேலை செய்து வருகிறார். இன்னொரு மகன் படித்துவருகிறார். அரசு சுகாதாரத்துறை ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கணவர் முனுசாமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் மருதாம்பாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். 

                                            

இந்நிலையில் கடந்த 18-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு மருதாம்பாள் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக மருதாம்பாளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருதாம்பாளுக்குப் போன் செய்து, ``உங்கள் வீட்டுப் பீரோ திறந்திருக்கிறது. இரவு நேரத்தில் சத்தமாக இருந்தது. உடனே வாங்கம்மா’’ என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து விரைந்து வந்து மருதாம்பாள், வீட்டின் அறையில் இருந்த பீரோ திறந்துகிடந்திருக்கிறது. அதிலிருந்த 10 பவுன் நகையும் அரை கிலோ வெள்ளிப் பொருள்களும், ரூ.5,000-மும் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து பெரம்பலூர் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், கொள்ளை நடந்த வீட்டைப் பார்வையிட்டு விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பெரம்பலூரில் சமீப காலமாகத் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் வீட்டில் தனியாக வசிக்கும் பெண்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.