64 கி.மீ நடைப் பயணம்... ஆரவாரமின்றிச் செல்லும் சின்னத்தம்பி... ஆச்சர்யத்தில் வனத்துறை! | Elephant Chinnathambi traveled 64 K.M, did not damage anything

வெளியிடப்பட்ட நேரம்: 17:31 (01/02/2019)

கடைசி தொடர்பு:20:48 (01/02/2019)

64 கி.மீ நடைப் பயணம்... ஆரவாரமின்றிச் செல்லும் சின்னத்தம்பி... ஆச்சர்யத்தில் வனத்துறை!

கோவையில் விளை நிலங்களைச் சேதப்படுத்துவதாக எழுந்த புகாரையடுத்து, சின்னதம்பி என்ற காட்டு யானையைக் கடந்த வாரம், டாப்ஸ்லிப் அருகே வரகளியாறு பகுதியில் விடப்பட்டது. குடும்பத்தை விட்டுப் பிரித்து, தந்தங்கள் உடைந்து காயங்களுடன் இடமாற்றம் செய்ததால் சின்னதம்பி யானைக்குத் தமிழகம் முழுவதும் ஆதரவு குரல்கள் எழுந்தன. குறிப்பாக, சின்னதம்பியை மீண்டும் அதன் வாழ்விடத்திலேயே விட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. சின்னதம்பியைத் தேடி, தாய் மற்றும் குட்டி யானை சுற்றி வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி கிராமத்துக்குள் நுழைந்தது.

சின்னத்தம்பி


தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்குச் சென்றது. இந்நிலையில், இன்று அதிகாலை உடுமலைப்பேட்டை சாலை, தேவனூர் புதூர், உடுகம்பாளையம், சாலையூர் என்று சுமார் 64 கி.மீ தூரம் சின்னதம்பி நடந்து சென்றுள்ளான். தோட்டங்கள், வீடுகள், மனிதர்கள், வாகனங்கள் என்று சின்னதம்பி சென்ற வழியில் பல விஷயங்கள் இருந்தும், சின்னதம்பியால் எந்த சேதமும் ஏற்படவில்லை. தன்னுடைய வாழ்விடத்தைத் தேடி சின்னதம்பி தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறான்.

இந்நிலையில், சின்னதம்பி தொடர்ந்து கிராமங்களின் வழியே சென்றுகொண்டிருப்பதால், வரகளியாறு பகுதியில் உள்ள கராலில் (கூண்டு) சின்னதம்பியை அடைத்து கும்கியாக மாற்றப் பயிற்சி கொடுக்க, வனத்துறை திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பொது மக்கள் மத்தியிலும், சூழலியல் ஆர்வலர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

நம்மிடம் பேசிய சூழலியல் ஆர்வலர் ராமமூர்த்தி, “கோவை மதுக்கரை மகாராஜ் யானை இறந்ததற்கு மயக்க மருந்து அதிக அளவில் கொடுத்ததுதான் முக்கியமான காரணம் என்றாலும், கரோலில் அடைத்ததும் அதனுடைய இறப்புக்குக் காரணமாக அமைந்துவிட்டது.அது வெளியில் வர முயற்சி செய்து தலையில் அடிபட்டு உயிரிழந்தது. சின்னதம்பியையும் அவ்வாறு செய்யக் கூடாது. ஏற்கெனவே, சின்னதம்பி யானை, குடும்பம் மற்றும் வாழ்விடத்தைப் பிரிந்த மன அழுத்தத்தில் இருக்கிறது. அது நினைத்திருந்தால், அந்த வழித்தடத்தில் இருந்து பல மனிதர்களின் உயிரும் உடைமையும் இப்போது இருந்திருக்காது. தன்னுடைய வாழ்விடத்தைத்தான் அது தேடிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் நாம் அதற்கு மேலும் அழுத்தம் கொடுக்கக் கூடாது. வனப் பகுதியில் இருக்கும் யானைகளை எல்லாம், கராலில் அடைத்தால், வனம் எப்படி வளம் பெறும். முதலில், யானைகளுக்குத் தொந்தரவாக அங்கு செயல்பட்டு வரும், கனிம வள கொள்ளையர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னதம்பியை அதன் வாழ்விடத்திலேயேவிட்டு, அதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என்றார்.

சின்னத்தம்பி

இதுகுறித்து வனத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “சின்னத்தம்பி யானைக்கு நல்ல வாழ்விடம் கொடுக்க வேண்டும் என்றுதான் நாங்களும் முயற்சி செய்து வருகிறோம். அதைத் தொடர்ந்து வனப்பகுதியில் விரட்டத்தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிலைமையை மேலிடத்துக்கும் சொல்லியுள்ளோம். அவர்கள்  என்ன சொல்கிறார்களோ அதைச் செயல்படுத்துவோம்” என்றனர்.

மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் பயணித்தும் சின்னதம்பி ஆரவாரம் இல்லாமல் அமைதியாகச் செல்வது வனத்துறை ஊழியர்களையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சின்னதம்பியை எந்நேரம் வேண்டுமானாலும் பிடித்து கராலில் அடைக்கலாம் என்று தகவல்களும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. கும்கிகள் கலீம் மற்றும் மாரியப்பன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வனத்துறைக்கு இது மிகவும் நெருக்கடி சூழலாக இருந்தாலும், அதன் நடவடிக்கைகள் சின்னதம்பியைக் காக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே கோவை மக்களின் எதிர்பார்ப்பு.