`5 நிமிஷத்துக்கு முன் வந்திருந்தால் காப்பாத்தியிருக்கலாமே’ - ஆம்புலன்ஸ் ஊழியரிடம் கதறிய பெண்  | Man died in Chennai accident

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (01/02/2019)

கடைசி தொடர்பு:18:50 (01/02/2019)

`5 நிமிஷத்துக்கு முன் வந்திருந்தால் காப்பாத்தியிருக்கலாமே’ - ஆம்புலன்ஸ் ஊழியரிடம் கதறிய பெண் 

 ஆம்புலன்ஸ் வரதாமதமாகியதால் விபத்தில் சிக்கியவர் பலி

சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் பிற்பகலில் நடந்த விபத்தில் ஒருவர் உயிருக்குப்போராடினார். ஆம்புலன்ஸ் வரத் தாமதமாகியதால் ஊழியருடன் அங்குள்ளவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண், `5 நிமிஷத்துக்கு முன் வந்திருந்தால் காப்பாத்தியிருக்கலாமே’ என்று கதறினார். 

சென்னை வள்ளுவர்கோட்டத்திலிருந்து தி.நகருக்குச் செல்லும் திருமலைபிள்ளை ரோடு பகுதியில் பிற்பகல் 3 மணியளவில் பைக்கில் வாலிபர் ஒருவர் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவும் பைக்கும் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்தச் சமயத்தில் அவ்வழியாகச் சென்ற தண்ணீர் லாரியின் சக்கரத்தில் பைக்கில் வந்தவர் சிக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார். 

விபத்தை நேரில் பார்த்தவர்கள் அங்கு திரண்டனர். உடனடியாக ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆம்புலன்ஸ் வர காலதாமதமாகியது. இந்தச் சமயத்தில் அந்தச் சாலையில் உள்ள தனியார் பள்ளியிலிருந்து மாணவர்கள் வெளியேறினர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியவரைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் மாணவர்களை அப்பகுதியில் உள்ளவர்கள் கலைந்து செல்லும்படி கூறினர். 

 ஆம்புலன்ஸ் வர தாமதமாகியதால் விபத்தில் சிக்கியவர் பலி

இதற்கிடையில் விபத்து குறித்து தகவலறிந்த போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதன் பிறகு தாமதமாக வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் அப்பகுதியில் உள்ள சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய அந்த நபர் இறந்துவிட்டதாகத் தகவல் பரவியது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ``அஞ்சு நிமிஷத்துக்கு முன் வந்திருந்தால் காப்பாத்தியிருக்கலாமே’’ என அங்கலாய்த்தார். இன்னொரு பெண்ணோ, `உங்களுக்கெல்லாம் யார் வேலை கொடுத்தது தெரியவில்லை. அவர்களைத்தான் தண்டிக்க வேண்டும். சீக்கிரம் வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்' என ஆவேசமாகப் பேசினார். இதையடுத்து விபத்தில் சிக்கியவர் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவரின் பெயர் கார்த்தி என்று தெரியவந்துள்ளது. அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் போன்ற விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர். 

பைக்கில் வந்த நபர், ஹெல்மெட் அணிந்திருந்தார். இருப்பினும் அவரின் தலையில்தான் அதிகளவு காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியிருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `விபத்தில் சிக்கியதும் பைக்கில் வந்தவர் அணிந்திருந்த ஹெல்மெட் தனியாக கீழே விழுந்துள்ளது. இதற்கு அவர் ஹெல்மெட்டை லாக் செய்யவில்லை என்பதே காரணம். போலீஸ், அபராதத்துக்குப் பயந்துதான் பெரும்பாலானவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். ஆனால், அவர்களில் ஒருசிலரைத் தவிர பலர் ஹெல்மெட்டை லாக் செய்வதில்லை. இதுதான் விபத்தில் சிக்கியதும் ஹெல்மெட் தனியாக விழுந்துவிடுகிறது. எனவே, ஹெல்மெட் அணிந்து செல்பவர்கள் கட்டாயம் லாக் செய்ய வேண்டும். இல்லையெனில் அதை அணிவதால் எந்தவித பயனும் இல்லை.