`இப்படியெல்லாம் ஏமாத்துறாங்க!’ - அப்போலோ டாக்டர் எனக் கூறி சாக்லேட் மோசடி  | Chennai Fake doctor cheated chocolate dealer one and half lakh rupees worth chocolate

வெளியிடப்பட்ட நேரம்: 18:46 (01/02/2019)

கடைசி தொடர்பு:18:46 (01/02/2019)

`இப்படியெல்லாம் ஏமாத்துறாங்க!’ - அப்போலோ டாக்டர் எனக் கூறி சாக்லேட் மோசடி 

சாக்லேட் கடை

சென்னை ஆயிரம் விளக்குப் போலீஸ் நிலையத்துக்கு வந்த புகாரில் இது வித்தியாசமானது. சென்னை சௌகார்பேட்டையைச் சேர்ந்த மகேந்திரகுமார் கொடுத்த புகாரின் பேரில் அப்போலோ டாக்டர் எனக் கூறி சாக்லேட் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

சென்னை சௌகார்பேட்டை தாண்டவராயன் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரகுமார். இவர், அந்தப் பகுதியில் சாக்லேட் டீலராக உள்ளார். கடந்த 10.12.2018-ல் மகேந்திரகுமாருக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை டாக்டர் மகேஷ் பேசுவதாகக் கூறியுள்ளார். பிறகு சாக்லேட் விவரங்களை அவர் கேட்டுள்ளார். அதற்கு மகேந்திரகுமாரும் பதிலளித்துள்ளார். இதையடுத்து, டாக்டர் மகேஷ், தன்னுடைய வாட்ஸ்அப் நம்பரை மகேந்திரகுமாரிடம் கொடுத்து, சாக்லேட் புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். 

இதையடுத்து மகேந்திரகுமாரும் படங்களை அனுப்பியுள்ளார். அதில் சிலவற்றை டாக்டர் மகேஷ் தேர்வு செய்து அவற்றை 11.12.2018-ல் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுவரும்படி கூறியுள்ளார். அதன்படி சாக்லேட்டை அங்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த டாக்டர் மகேஷ், மருத்துவமனைக்குள் சாக்லேட் பார்சலைக் கொண்டு செல்ல முடியாது. எனவே, அருகில் உள்ள ஒரு கடையின் பெயரைச் சொல்லி அங்கு கொண்டு செல்ல கூறியுள்ளார். சாக்லேட் பார்சலை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு டாக்டர் மகேஷ் சென்றார். அவருடன் கடை ஊழியர் ஒருவரும் சென்றுள்ளார். சாக்லேட் பார்சல்களை இறக்கிய டாக்டர், பார்சலை உள்ளே வைத்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் காத்திருந்த ஊழியர் அதிர்ச்சியடைந்தார். பிறகு நடந்த விவரங்களை உரிமையாளர் மகேந்திரகுமாரிடம் ஊழியர் கூறினார். 

  அப்போலோ டாக்டர் என மோசடி

இதையடுத்து மகேந்திரகுமார் ஆயிரம் விளக்குப் போலீஸ் நிலையத்தில் 1,50,000 ரூபாய் மதிப்புள்ள சாக்லேட்டை வாங்கிவிட்டு பணம் தரவில்லை எனப் புகார் செய்தார். போலீஸார், டாக்டர் மகேஷ் கொடுத்த வாட்ஸ் அப் நம்பரை ஆய்வு செய்தனர். மேலும் அப்போலோ மருத்துவமனையிலும் விசாரித்தனர். அப்போதுதான் டாக்டர் மகேஷ் அங்கு வேலைப்பார்க்கவில்லை என்று தெரியவந்தது. மகேந்திரகுமார் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டிருப்பதைப் போலீஸார் கண்டறிந்தனர். அப்போலோ மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றுவதாகக் கூறி ஏமாற்றிய நபரை போலீஸார் தேடி வந்தனர். போலீஸாரின் சில மாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு மகேந்திர குமாரை ஏமாற்றிய நபர் குறித்த விவரங்கள் போலீஸாருக்குக் கிடைத்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மகேந்திரகுமார் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினோம். விசாரணையில் சாக்லேட்டை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவர் பெங்களூரைச் சேர்ந்த இர்பான் உல்லாகுரேசி (30) என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்து விசாரித்துவருகிறோம்’’ என்றனர்.