`ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்காதது வருத்தம் அளிக்கிறது!’ - தம்பிதுரை | Thambidurai stresses bharat ratna for Jayalalithaa

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (01/02/2019)

கடைசி தொடர்பு:20:30 (01/02/2019)

`ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்காதது வருத்தம் அளிக்கிறது!’ - தம்பிதுரை

இடைக்கால பட்ஜெட்

``ஒரு திருமண நிகழ்ச்சிக்காக கரூர் வந்தேன். மற்றபடி, நாடாளுமன்றத்தில் நடந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் நிகழ்ச்சியைப் புறக்கணிக்கவெல்லாம் இல்லை" என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

தம்பிதுரை

இன்று நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் சாதக, பாதங்களை இந்தியா முழுக்க உள்ள கட்சிகளும் அரசியல்வாதிகளும் விமர்சித்து வருகிறார்கள். ஆனால், மக்களவைத் துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுரை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது கலந்துகொள்ளாமல், கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. கரூரில் பல்வேறு திட்டங்களுக்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ``மத்திய அரசு நீண்ட காலத்துக்குப் பிறகு, இப்போதாவது விவசாயிகளையும், நடுத்தர மக்களையும் பற்றி சிந்தித்து இருப்பது வரவேற்கத்தக்கது. வருமான வரி உச்சவரம்பு 5 லட்சம் ஆக்கியது போதாது. அதை 8 லட்சமாக உயர்த்தி மாற்றி அறிவிக்க வேண்டும். 2 ஏக்கர் மற்றும் அதற்குக் குறைவாக உள்ள விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகையை, 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு குறித்து அதிகம் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. பேரறிஞர் அண்ணாவிற்கும் ,மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கும் பாரதரத்னா விருந்து வழங்காதது வருத்தமளிக்கிறது; ஏமாற்றமளிக்கிறது. பட்ஜெட்டை புறக்கணிக்கவில்லை. ஒரு திருமண நிகழ்ச்சிக்காக இன்று வந்தேன். பட்ஜெட் கூட்டத்தொடரில் எங்கள் கருத்துகளை உரக்க பேசுவோம்’’ என்றார்.