நெல்லையில் நடந்த பாய்மரப் படகுப்போட்டி! - ஆர்வத்துடன் பங்கேற்ற போட்டியாளர்கள் | boat race conducted in church function in nellai district

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (01/02/2019)

கடைசி தொடர்பு:20:54 (01/02/2019)

நெல்லையில் நடந்த பாய்மரப் படகுப்போட்டி! - ஆர்வத்துடன் பங்கேற்ற போட்டியாளர்கள்

நெல்லை மாவட்டம் தோமையார்புரத்தில் நடந்த பாய்மர படகுப்போட்டி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஏராளமான போட்டியாளர்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

நெல்லை மாவட்டம் தோமையார்புரத்தில் நடந்த பாய்மரப் படகுப்போட்டி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஏராளமான போட்டியாளர்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 

தயார் நிலையில் படகுகள்

நெல்லை மாவட்டம் பெரியதாழையில் புனித காணிக்கை அன்னை தேவாலயம் உள்ளது. அந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவின்போது போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி பாரம்பர்ய பாய்மரப் படகுப்போட்டி நடத்தப்பட்டது. நெல்லை மாவட்டம் இடிந்தகரை அருகேயுள்ள தோமையார்புரத்தில் இந்தப் போட்டி நடந்தது. 

தோமையார்புரத்தில் தொடங்கிய இந்தப் போட்டிகளில் இளைஞர்களும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். எட்டுப் பேர் கொண்ட குழுவினராகப் பாய்மரப் படகுகளில் பங்கேற்றவர்கள் மொத்தம் 9 படகுகளில் போட்டிகளில் கலந்து கொண்டனர். 72 பேர் கலந்துகொண்ட இந்தப் போட்டியைக் காண்பதற்காக சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கடற்கரையில் குவிந்திருந்தனர். 

பாய்மரப் படகுப்போட்டி

போட்டியில் பங்கேற்ற வீரர்களைப் பாதுகாக்கும் வகையில் கூடங்குளம் கடலோரப் பாதுகாப்புப் படையின் உதவி ஆய்வாளர் ஜோசப் தலைமையிலான காவலர்களும் ரோந்துப் படகுகளுடன் உடன் சென்றனர். பாதுகாப்பு உபகரணங்கள் அவசர உதவிப் பொருள்களுடன் உடன் சென்ற ரோந்துப் படகுகளுக்கு நடுவே 9 பாய்மரப் படகுக் குழுவினரும் ஆர்வத்துடன் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாய்மரப் படகுகளைக் கடலில் செலுத்தினார்கள். 

பாய்மரங்கள்

காற்றின் வேகத்துக்கு ஏற்ற வகையில், நுணுக்கமாகவும் லாகவத்துடனும் படகுகளைச் செலுத்தி குறிப்பிட்ட இலக்கை எட்டியதில் வாசன் என்பவரது குழுவினருக்கு முதலிடம் கிடைத்தது. அந்தக் குழுவினருக்கு 2 சவரன் தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த லூர்தய்யா குழுவினருக்கு ஒரு சவரன் தங்கம் பரிசாகக் கிடைத்தது. ரவி குழுவினர் மூன்றாம் இடத்தைப் பிடித்தனர். அவர்களுக்கு டிவியும், நான்காம் இடம் பிடித்த மெனக்ஸா குழுவினருக்கு ஃபிரிட்ஜ், ஐந்தாம் இடத்தைக் கைப்பற்றிய சந்தியா குழுவினருக்கு வாஷிங் மெஷின் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.