`திருமணத்துக்கு மறுத்ததால் கொன்றேன்!’ - புதுக்கோட்டை அருகே காதலியைக் கொலை செய்த காதலன் வாக்குமூலம் | Pudukottai: Man arrested for killing his lover

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (01/02/2019)

கடைசி தொடர்பு:22:00 (01/02/2019)

`திருமணத்துக்கு மறுத்ததால் கொன்றேன்!’ - புதுக்கோட்டை அருகே காதலியைக் கொலை செய்த காதலன் வாக்குமூலம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் காதலியை அடித்துக் கொன்றுவிட்டு, யாரோ எங்கள் இருவரையும் அடித்துவிட்டுச் சென்றனர் என நாடகமாடிய காதலன் போலீஸார் விசாரணையில் சிக்கிக்கொண்டார். 

கொலை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சூரக்காடைச் சேர்ந்தவர் சண்முகம். இவரின் மகள் மகாலட்சுமி (29). இதே பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (36). மகாலெட்சுமிக்கும் மோகனுக்கும் இடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தநிலையில், முதலில் இரு வீட்டாரும் மறுத்தனர். பின்பு இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஒப்புக்கொண்டனர். பொங்கல் பண்டிகை கழித்து இருவருக்கும் திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்ய இருந்தனர். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வது வழக்கம். அதன்படி, வீட்டுக்கு அருகே உள்ள தைல மரக்காட்டில் நீண்ட நேரமாக இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். 

 இந்த நிலையில் மகாலெட்சுமி நீண்ட நேரமாக வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த பெற்றோர் தேடினர். அப்போது, தைல மரக்காட்டில் மகாலெட்சுமி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இதைப் பார்த்த பெற்றோர் மயக்கமடைந்தனர். அருகில், மோகன் காயங்களுடன், கையில் கட்டையுடன் சரிந்து விழுந்து கிடந்தார். இதுகுறித்து கறம்பக்குடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோகனும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீஸார், இருவரையும் யாரும் தாக்கினார்களா என்று கேட்டபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தார். இதனால், சந்தேகமடைந்த போலீஸார் மோகனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், மகாலெட்சுமியைக் கட்டையால் அடித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். `உடனே திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியதால், கொன்றேன். கொலையை மறைப்பதற்காக என்ன செய்வது என்று தெரியாமல், என்னை நானே கட்டையால் அடித்துக்கொண்டு நாடகமாடினேன்’ எனக் காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டையில் காதலியைக் காதலனே அடித்துக்கொன்று யாரோ அடித்துக் கொன்றுவிட்டதாக நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.