`கரூர் விவசாயி தற்கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும்!’ - உறவினர்கள் சாலை மறியல் | Karur farmer's relatives staged protest

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (02/02/2019)

கடைசி தொடர்பு:00:00 (02/02/2019)

`கரூர் விவசாயி தற்கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும்!’ - உறவினர்கள் சாலை மறியல்

        தங்கராஜ் உறவினர்கள் சாலை மறியல்    

`என் சாவுக்கு காரணம் என் உறவினர்தான்’ என்று வீடியோவில் வாக்குமூலம் கொடித்து, அதை நண்பர்களின் வாட்ஸ் அப்புகளுக்கு அனுப்பிய கரூர் விவசாயி தங்கராஜ் அதன் பிறகு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்,``தங்கராஜ், தனது சாவுக்கு காரணமாகச் சொல்லும் இரு நபர்களை உடனே கைது செய்யணும்’’ என்று அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

 கரூர் புன்னம்சத்திரம் அருகே உள்ள புன்னம் ஊராட்சி பழமாபுரம் எனும் ஊரில் வசித்து வரும் விவசாயி தங்கராஜ். இவருக்குத் திருணமாகி குழந்தைகள் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். நிலம் சம்பந்தமாகப் பிரச்னை இவருக்கும், இவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் இடையில் கடந்த 2 மாதம் காலமாக இருந்துவந்துள்ளது. தன் தந்தைக்கும் தந்தையின் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த நிலம் சம்பந்தமான பிரச்னையால், மனம் நொந்துபோயுள்ளார் தங்கராஜ். இதனால்,விரக்தியடைந்த அவர், நேற்று மாலை தன் நண்பர்களுக்கு அனுப்பியுள்ள வீடியோவில், தன்னுடைய தற்கொலைக்குக் காரணம் தன் உறவினர்கள்தான் என்று பெயர் குறிப்பிட்டிருந்தார். அதேபோல, தற்கொலை செய்துகொள்ள பூச்சிக்கொல்லி மருந்தைச் சாப்பிட்டுள்ளார். அவர் அனுப்பிய வீடியோவைப் பார்த்து பதறிய அவரின் நண்பர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து தங்கராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலைக் கைப்பற்றி வேலாயுதம்பாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனை முன்பு தங்கராஜ் உறவினர்கள்

இதனிடையே, ``தங்கராஜ் சாவுக்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்’’ என அவரின் உறவினர்கள் கோரிக்கை வைத்து, வேலாயுதம்பாளையம் கடைவீதி முன்பு அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. சம்பவம் அறிந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் ,'குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்வதாக' உறுதியளித்தார். அதனால், சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். இருப்பினும், `தங்கராஜ் வீடியோவில் குறிப்பிட்ட நபர்களைக் கைது செய்தால்தான், அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து உடலை பெற்றுக்கொள்வோம்' எனத் தெரிவித்துவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினர்.