`போட்டித் தேர்வுகளில் நெகடிவ் மதிப்பெண் முறை உடனடியாக அகற்றப்பட வேண்டும்!’ - உயர் நீதிமன்றம் | Negative marking is bad in law and should be done away with immediately, rules Madras HC

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (01/02/2019)

கடைசி தொடர்பு:09:23 (02/02/2019)

`போட்டித் தேர்வுகளில் நெகடிவ் மதிப்பெண் முறை உடனடியாக அகற்றப்பட வேண்டும்!’ - உயர் நீதிமன்றம்

நெகடிவ் மதிப்பெண் முறையை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 

சென்னை உயர் நீதிமன்றம்

2013-ம் ஆண்டு ஐ.ஐ.டி தேர்வு எழுதி அட்வான்ஸ் தேர்வுக்குத் தேர்ச்சி பெறாத நெல்சன் என்ற மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், தனது வினாத்தாளை மறுமதீப்பீடு செய்ய உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், `பிரதான தேர்வில் 50 மதிப்பெண் பெற்றால் அட்வான்ஸ் தேர்வுக்குத் தேர்ச்சி பெறலாம் என்ற நிலையில், 47 மதிப்பெண் எடுத்தேன். இதனால், என்னால் அட்வான்ஸ் தேர்வுக்குத் தகுதிபெற இயலவில்லை. எனது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று அவர் கோரியிருந்தார். இந்த மனுவை அப்போது விசாரித்த நீதிமன்றம், மாணவர் நெல்சனை அட்வான்ஸ் தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவிட்டதுடன் விடைத்தாள் நகலைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. 

இந்தநிலையில், மாணவர் நெல்சன் தாக்கல் செய்திருந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கல்வியில் முன்னேற்றம் கண்டுள்ள கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில்கூட நெகடிவ் மதிப்பெண் முறை இல்லை என்று வாதிடப்பட்டது. 

தேர்வு

இதைக் கேட்ட நீதிபதி, சரியாக எழுதிய பதில்களுக்காக மதிப்பெண்ணை ஏன் குறைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். மேலும், எந்தப் போட்டித் தேர்விலும் நெகடிவ் மதிப்பெண் முறை இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். சி.பி.எஸ்.இ மற்றும் பிற போட்டித் தேர்வுகளில் இருந்து நெகடிவ் மதிப்பெண் கணக்கிடும் முறை முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். புத்திசாலியாக யூகிப்பது ஒரு கலை. அது நம் வாழ்வின் பல்வேறு தருணங்களில் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்ட நீதிபதி மகாதேவன், ஒருவர் எல்லா நேரத்திலும் சரியாகக் கணிக்க முடியாது என்றும் கூறினார். அதேநேரம் குருட்டுத் தனமாக யூகிப்பது, புத்திசாலித்தனமாக யூகிப்பது ஆகிய இரண்டு வெவ்வேறானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.