மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்ட பெரியாரிய இயக்கங்கள் ஆலோசனை - பா.ஜ.க-வினர் திரண்டதால் பரபரப்பு | Discussing to Hold Black Flag Protests Against Modi

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (02/02/2019)

கடைசி தொடர்பு:07:51 (02/02/2019)

மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்ட பெரியாரிய இயக்கங்கள் ஆலோசனை - பா.ஜ.க-வினர் திரண்டதால் பரபரப்பு

திருப்பூர் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கும் பிரதமர் மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த பெரியார் இயக்கங்களின் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அங்கு பா.ஜ.க-வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பா.ஜ.க

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிப்ரவரி 10-ம் தேதி தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கிறார். மோடியின் வருகையை எதிர்த்து பெரியார் இயக்கங்களின் சார்பில் அன்றைய தினம் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று திருப்பூரில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்றது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இந்தநிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற தனியார் அரங்கத்துக்கு எதிரே திடீரென திரண்ட பா.ஜ.க-வினர், ஆலோசனைக் கூட்டத்தில் இருந்தவர்களைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பத் தொடங்கினர். அதைக்கண்ட பெரியார் இயக்கங்களும் எதிர் முழக்கமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.