`ஆளுநரின் தாமதத்தால்தான் விடுதலை தள்ளிப்போகிறது’ - அற்புதம்மாள் வேதனை! | Governor's delay is the reason for perarivalan Not yet released says arputhammal

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (02/02/2019)

கடைசி தொடர்பு:08:03 (02/02/2019)

`ஆளுநரின் தாமதத்தால்தான் விடுதலை தள்ளிப்போகிறது’ - அற்புதம்மாள் வேதனை!

ஏழு தமிழர் விடுதலை தொடர்பான விசயத்தில் மக்களின் ஆலோசனைகளைத்தான் எடுத்துக்கொள்வேன் என அற்புதம்மாள் தெரிவித்தார்.

அற்புதம்மாள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்துவரும் 7 தமிழர்களை விடுவிக்க ஆதரவு திரட்டி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆதரவுகளைத் திரட்டியும் ஆலோசனை பெற்றும் வருகிறார். இந்நிலையில் மதுரை ராமுசுப்பு அரங்கில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாகச் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``சிறை சென்று 28 வருடமான நிலையில் விடுதலை செய்யப்படவில்லை. இது தாங்க முடியாத வேதனை,

பேரறிவாளன்

சட்டம் நிறைவேற்றப்பட்டு 140 நாள்களாகியும் ஆளுநர் தாமதிக்கிறார், நியாயமான கோரிக்கை புறம்தள்ளப்படுவதால் மக்களைச் சந்திக்க வந்துள்ளேன். கிடைத்த நீதியைப் பெற முடியாத சூழலில் உள்ளோம். என் மகனுக்காக சிறை செல்வோம் என சில மக்கள் கூறினர். ஆனால், ஒரு தாயாக யாரும் சிறை செல்வதை விரும்பாத காரணத்தால் என் மகனுக்காக யாரும் சிறை செல்ல வேண்டாம் என வலியுறுத்தினேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என் மகனை விடுவிப்போம் என எனக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால், ஆளுநரின் தாமதம் காரணமாக இன்னும் விடுதலை ஆகவில்லை என்பதே உண்மை. ஒட்டு மொத்த தமிழக மக்களும் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மக்கள் சந்திப்பில் மக்களின் கருத்துகள்படி இறுதி முடிவு எடுப்போம்’’ என்றார்.