ஒகி புயல் நிவாரணம் குறித்த வழக்கு - தேசியப் பேரிடர் மீட்பு ஆணையச் செயலர் பதிலளிக்க நீதிமன்ற உத்தரவு! | Ockhi relief Case filed in Madurai Bench of Madras High Court

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (02/02/2019)

கடைசி தொடர்பு:07:55 (02/02/2019)

ஒகி புயல் நிவாரணம் குறித்த வழக்கு - தேசியப் பேரிடர் மீட்பு ஆணையச் செயலர் பதிலளிக்க நீதிமன்ற உத்தரவு!

ஒகி புயல் நிவாரணம் வழங்கக் கோரிய வழக்கில் மத்திய உள்துறை முதன்மைச் செயலர் மற்றும் தேசியப் பேரிடர் மீட்பு ஆணையத்தின் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ஓகி புயல்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது, `கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29 மற்றும் 30-ம் தேதிகளில் ஒகி புயல் தாக்கியதில் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கபட்டது. ஆயிரக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்தன. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாற்பதுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்தனர். நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகள் கரை திரும்பவில்லை. இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. புயல் நிவாரணத்துக்காக 9,302 கோடி ரூபாய் உடனடியாக ஒதுக்க வேண்டும் எனத் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இது வரையில் தமிழக முதல்வர் கேட்ட நிதி ஒதுக்கப்படவில்லை.

ஓகி புயல்

இதனால் மக்களுக்கு நிவாரணம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தேசியப் பேரிடர் நிதியில் இருந்து தமிழக அரசு கேட்ட நிதியை  ஒதுக்கிட மத்திய உள்துறை அமைச்சத்தின் தேசியப் பேரிடர் மீட்புப் பிரிவு முதன்மைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய உள்துறை முதன்மைச் செயலர் மற்றும் தேசியப் பேரிடர் மீட்பு ஆணையத்தின் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.