``மனம் மாறிவிடக் கூடாது” - துப்பட்டாவால் உடலைக் கட்டிக்கொண்டு ரயிலில் பாய்ந்த கேரள காதல் ஜோடி | Lover's suicide in Coimbatore, Police investigation was on

வெளியிடப்பட்ட நேரம்: 09:05 (02/02/2019)

கடைசி தொடர்பு:09:09 (02/02/2019)

``மனம் மாறிவிடக் கூடாது” - துப்பட்டாவால் உடலைக் கட்டிக்கொண்டு ரயிலில் பாய்ந்த கேரள காதல் ஜோடி

கேரளாவைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி தங்கள் உடல்களைத் துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கோவையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

 

கோவை - போத்தனூர் இடையே  ஜி.எம்.நகரில் உள்ள ரயில் தண்டவாளத்தில் 19 வயது மதிக்கத்தக்க இளம் காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். அவர்கள் இருவரின் உடல்களும் துப்பட்டாவால் கட்டப்பட்டிருந்தது. சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் தண்டவாளத்தில் கிடந்த இளம் ஜோடியின் சடலங்களைப் பார்த்த அப்பகுதி மக்கள் ரயில்வே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், இருவரது உடல்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.  அவர்களின் அடையாள அட்டைகளை வைத்து, கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் பெயர் அமல்.பி.குமார் மற்றும் சூர்யா நாயர் என்பதும் இருவரும் அடூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இருவரும் உயிருக்கு உயிராகக் காதலித்து வந்த நிலையில், அதற்கு இவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாகத் தெரிகிறது. இதனால் வீட்டைச் விட்டு செல்ல முடிவு செய்தவர்கள் நேற்று கேரளம் மாநிலம் கோட்டயத்திலிருந்து சென்னைக்கு டிக்கெட் எடுத்து ரயிலில் புறப்பட்டுள்ளார்கள். ஆனால், இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை சென்னை செல்லும் முடிவைக் கைவிட்டு இன்று காலை இருவரும் கோவையில் இறங்கியுள்ளனர்.

ரயில்வே பாதையில் நடந்து சென்றவர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்கள். கடைசி நேரத்தில் மனம் மாறிவிடக் கூடாது என்பதற்காக இருவரும் தங்கள் உடல்களைச் சேர்த்து துப்பட்டாவால் கட்டிக்கொண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர். 

இருவரது உடல்களையும் மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளம் காதல் ஜோடியின் தற்கொலை அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க